எத்தனை சந்தேகங்களாடா சாமி?
நம் அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களில் எது சரி, எது தவறு என்று அறிய முடியாமல் தவிக்கின்றோம் -காரணம் இரண்டு பக்கங்களையும் நியாயப்படுத்தும் தகவல்கள் நிறைந்து கிடைப்பதால். பால் குடிப்பது மிக மிக நல்லது என்று சிலரும், அது கன்றுக்குட்டிக்கான உணவு, மனிதனுக்கு கெடுதல் செய்யும் என்று சிலரும் சொல்லும் போது சாமானியன் ரொம்பவே குழம்பி விடுகிறான் என்பது நிஜம். எத்தனை சந்தேகங்களாடா சாமி? மேலே படியுங்கள்.....
இன்றைய இணைய உலகில் தகவல்கள் எங்கும் மண்டி கிடக்கின்றன-தேவைக்கு அதிகமாகவே. அதில் எது சரியான தகவல், எது தவறானது என்று அன்னப் பறவை போல் பிரித்து அறியும் திறமையை வளர்த்துக் கொள்வது இன்று அத்தியாவசியமாகிறது.
எந்த உணவையும் நம்பி உட்கொள்ளமுடியாது போலிருக்கிறது இன்றைய சூழலில். காலையில் எழுந்ததும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது ரொம்பவும் நல்லது என்கின்றனர் ஒரு சாரார். அவ்வளவு தண்ணீர் குடித்தால் சிறுநீரகம் காலி என்கின்றனர் பிறிதொரு சாரார். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்று சிலரும், காய்ச்சினால் அதில் உள்ள பிராண சக்தி நீங்கி
சத்து இல்லாமல் போய் விடும் என்று சிலரும் சொல்கின்றனர். குளோரின் கலந்த குடிநீரை அரசு வழங்குகிறது. அது இரசாயனம் உடம்புக்கு கெடுதல் என்று சொல்வாரும் உண்டு. RO தண்ணீர் கூட கெடுதல் தான் என்றும் சொல்கிறார்கள். 'Bore' தண்ணீரை அப்படியே குடிக்கலாம் என்றால் அதில் பாக்டீரியாக்கள் இருக்கும் என்று அச்சுறுத்துகிறார்கள்.
மீனில் ஓமெகா 3 உள்ளது, உடலுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். அதில், கெட்டுப் போகாமல் இருக்க செலுத்தும் இரசாயனம் புற்று நோயை மேள தாளம் கொட்டி வரவேற்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆட்டு இறைச்சியில் ப்ரோட்டீன் இருக்கிறது, அது நல்லது என்றும், அதில் உள்ள கெட்ட கொழுப்பு உடலுக்கு பெரிய தீங்கு செய்யும் என்றும் பேசப் படுகிறது.
பழங்கள் மற்றும் தயிர், மோர் போன்றவை சளியை அதிகப் படுத்தும் என்று சிலரும், அவை நல்லது என்று சிலரும் சொல்கின்றனர். தேங்காய் மிகவும் நல்லது, அதில் இருப்பது நல்ல கொழுப்பு என்று சிலரும், அது கூட கெட்ட கொழுப்பு தான் என்று சிலரும் கூறுகின்றனர்.
இன்று நாம் சாப்பிடும் சிக்கன் மிகவும் கெடுதல் என்றும், நல்லது என்றும் இரு வேறு கருத்து நிலவுவது உங்களுக்கும் தெரியும் அல்லவா? காபி குடிப்பது உடலுக்குக் கெடுதல் என்று வெகு காலமாக நம்பப் பட்டு வந்தது. இப்பொழுது அது இதயத்திற்க்கு நல்லது என்கிறார்கள். கேட்டால் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழக ஆய்வு சொல்கிறது என்கிறார்கள்(பிரேசில் நாட்டு காபி கம்பெனிக் காரன் செய்த தில்லுமுல்லு வேலை என்று சொல்வாரும் உண்டு)
'Green tea' உடலுக்கு நல்லது, புற்று நோயை தடுக்கும் என்று சொல்வார்களும் உண்டு. இல்லை, இல்லை அது மன அமைதியைக் கெடுத்து விடும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அடிக்கடி medical checkup நல்லது என்று நம்பு பவர்களும் உண்டு- அது உடல் நலத்தையும், ஆரோக்கியத்தின் மீது உள்ள நம்பிக்கையைக்கெடுக்கும் மன நிலையை உண்டு பண்ணும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
தினசரி உடல் பயிற்சி செய்வது நல்லது என்கிறார்கள்-சிலர் கடுமையான உடற்பயிற்சி கெடுதல் என்கிறார்கள். 'யோகா' சிறந்தது என்று எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். அதையும், நல்ல குருவிடம் முறைப் படி கற்கா விட்டால் நல்ல பலன்களை தருவதற்குப் பதில் கெடு பலன்களை விளைவிக்கும் என்றும் அச்சுறுத்துகிறார்கள்.
அது சரி, எதனால் இந்த குழப்பங்கள்?
- கார்ப்பொரேட் மருந்து கம்பெனிகள் மக்கள் நலனைப் பற்றி சற்றும் கவலைப் படாமல் பணத்திற்காக தவறான தகவல்களை பரப்புவது
- அரை வேக்காட்டு அறிவு உடையவர்கள் இணையத்தில் தகவல்களை பரப்புவது
சரி, இதற்கு தீர்வு தான் என்ன? தீர்வு கண்ணுக்கு எட்டியத் தொலைவில் இருப்பதாக தெரியவில்லை.
- அரசாங்கம் சரியான ஆராச்சிகளை செய்து சரியான தகவல்களை மக்களுக்கு அளிக்க வேண்டும்.
- தவறான தகவல்களை தருபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
- இயற்கை உணவை உண்ணலாம்
- வெள்ளை சக்கரை போன்றவற்றை தவிர்க்கலாம்
- காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்க்கலாம்
இந்த கட்டுரையின் நோக்கம் மக்களை விழிப்புணர்வாக இருக்க செய்வதே. எது சரி, எது ஏமாற்று வேலை என்று ஆராய்ந்து செயல் பட்டால் நல்ல ஆரோக்கியத்துடன் நல்ல வாழ்க்கை வாழலாம்.
வாழ்க வளமுடன்!
எத்தனை சந்தேகங்களடா சாமி?, யோகா' ஓமெகா 3, RO,காய்கறிகள், பழங்கள்,உடல் பயிற்சி,பாக்டீரியாக்கள்
Post a Comment