April 13, 2025 03:30:50 PM Menu
 

மனிதன் என்றுமே எதிலுமே முழு திருப்தி அடைவதில்லை. பசிக்கு உணவு, உடுத்த உடை, இருக்க ஒரு வீடு இருந்தால் போதும் என்று தான் அவன் ஆரம்பத்தில் நினைப்பான்.  அவை எல்லாமே கிடைத்து விட்டாலோ அவன் மனம் மேலும் மேலும் ஆசைப் படுகின்றது. பெரிய வீடு வேண்டும், சொகுசு கார் வேண்டும், கையில் ரொக்கப் பணம் அதிகம் வேண்டும் என்று அவன் மனம் முடிவில்லா ஆசைகளுக்கு வித்திட ஆரம்பித்து விடுகின்றது. ஒருவன் எவ்வளவு தான் பணம் வைத்திருந்தாலும், அவனால் முழு திருப்தியுடன் வாழ முடியுமா? மேலே படியுங்கள்......



ஏன் மனிதனால் முழு திருப்தியுடன் வாழ முடியவில்லை? அவனது ஆசைகள் முழுமையாக நிறைவேறாததால் தானே அவனால் முழு திருப்தியுடன் வாழ முடியவில்லை? மனிதன் பணம், பதவி, புகழ் மற்றும் காதல் வாழ்க்கையில் அதிகம் எதிர்பார்க்கின்றான். அவனது குழந்தைகளும் இவை எல்லாவற்றையும் பெற வேண்டும் என்று விரும்புகின்றான். இவைகள் தான் அவனுக்கு நிரந்தர இன்பத்தைக் கொடுக்கும் என்று தப்புக் கணக்கு போடுகின்றான். மனித மனம் இன்பத்தை வெளி உலகில் தேடுகின்ற வரை, பொருள் உலகில் இன்பத்தை தேடுகின்ற வரை அவனது மனம் திருப்தி அடையவே அடையாது என உறுதியாக சொல்லலாம். அம்பானி இன்னும் சம்பாதிக்க ஆசைப் படுவதேன்? அவராலும், மூன்று வேளைக்கு மேல் சாப்பிட முடியாது தானே? பின் எதற்கு இந்த முடிவில்லாத பணத்தேடல்? பணம் தனக்கு முழுமையான சந்தோஷம் தரும் என்று அவர் நம்புவதினால் தானே அவர் இன்றும் பணத்தின் பின் ஓடுகின்றார்.

ஆனால், உண்மை என்னவென்றால், உண்மையான சந்தோஷம் நம் உள்  இருக்கின்றது. அதாவது சந்தோசம் என்பது ஒருவிதமான மன நிலை. கோடியில் புரளுபவர் இரவில் தூக்கம் இல்லாமல் பட்டு மெத்தையில் புரள்வதைப்  பார்க்கின்றோம். அதே சமயம், ஒரு கூலித் தொழிலாளி வெறும் தரையில் சுகமாகத் தூங்குவதையும் பார்க்கின்றோம். 

ஆக, நம்மிடம், பணம், பதவி, அந்தஸ்து, உறவுகள் எதுவுமே இல்லாமல் போனாலும் நம்மால் சந்தோசமாக வாழ முடியும்-நமக்கு அத்தகையான மனப் பக்குவம் இருந்தால். நான் பணம் சம்பாதிப்பதை வேண்டாம் என்று சொல்லவில்லை. வாழ்க்கையில், மேலும் மேலும் உயரப்  பறக்க நினைப்பவர்களை வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. பணம் கொஞ்சமாக இருந்தாலும், நிறைய இருந்தாலும், என்றுமே மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்ய வேண்டும் என்பதே என்னுடைய கருத்து ஆகும். மேலும் உயர முயற்சி செய்வது ஒரு புறம் இருந்தாலும் , இன்று நம்மிடம் என்ன உள்ளதோ அவற்றில் முழு திருப்தி அடைந்து சந்தோஷமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நம்மிடம் இருக்கின்ற வீடு, துணை, குடும்பம், அந்தஸ்து,  எல்லாவற்றிலும் திருப்தியும் சந்தோஷமும் அடையப்  பழக வேண்டும். இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை. எதை இழந்தாலும், மனது பக்குவமடைந்து இருந்தால், பெரிய துன்பங்களாய் தோன்றாது. 

மனம் தான் ஒருவனின் சுக துக்கங்களை நிர்ணயிக்கின்றது. மனதை பக்குவப் படுத்தி பழகி விட்டால், எப்பொழுதுமே நம்மால் இன்பமாய் முழு திருப்தியுடன் வாழ முடியும். இது சொல்லுவதற்கு எளிது. ஆனால் கடைப் பிடிப்பது மிகவும் கடினம். ஆகையினால் தான், மனிதன் இறக்கும் போது, 
ஏதோ ஒரு குறையுடன் தான் இறக்கின்றான். செல்வம் சேர்க்க முடியவில்லையே என்ற குறை, புகழ் அந்தஸ்து கிடைக்க வில்லையே என்ற குறை, நினைத்தபடி  காதல் வாழ்க்கையை  அனுபவிக்க முடிய வில்லையே என்ற குறை, குழந்தைகளை சரியாக வளர்க்க வில்லையே என்ற குறை என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும் அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றபடி. அதனால் தான் அவன் மீண்டும், மீண்டும் பிறக்கின்றான் இவ்வுலகில்.

சந்தோஷம் என்பது நம் மனதில் தான் இருக்கின்றது. அதை வெளியில் தேடக் கூடாது. நியாயமான ஆசைகள் எவ்வளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதைப் பெறுவதற்காக எவ்வளவு முயற்சிகள் வேண்டுமென்றாலும் எடுக்கலாம். ஆனால், எந்நிலையிலும், சந்தோஷமாக வாழும் மனப் பக்குவம் அவசியம் பெற வேண்டும். அத்தகையான மன முதிர்ச்சி மட்டும் நாம் பெற்று விட்டால், பின் நம் வாழ்வில் என்றுமே சந்தோசம் தான். ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

முழு திருப்தியுடன் வாழும் முறை நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அப்படியே அந்த முறைகள் தெரிந்தாலும், அவற்றைக் கடை பிடிப்பது என்பது மிக மிக சில பேருக்கே முடிகின்றது. சுருக்கமாக சொல்வதென்றால், இவ்வுலகில் முழு திருப்தியுடன் வாழ்பவர் எவருமே இல்லை என்று உறுதியாகக் கூறலாம். யோகப் பயிற்சி, தியானம் போன்றவை நம் மனம் ஓரளவு பக்குவப்பட பெரிதும்  உதவும் என்பது நிஜம்.

வாழ்க வளமுடன்!

நம்பிக்கை தான் வாழ்க்கை 

நேர்மையானவர்கள் இன்று இருக்கின்றார்களா?

31 Mar 2017

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top