உண்மையான ஆன்மிகவாதி யார் என்பதை அடையாளம் காண்பதில் மக்களுக்கு சரியான புரிதல் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. தாடி வைத்தவரை எல்லாம் ஆன்மிகவாதிகள் என்று தப்புக் கணக்குப் போட்டு விடுகின்றார்கள் நம் மக்கள். காவி கட்டியவரெல்லாம் பழுத்த ஞானிகள் என்று காலில் விழுந்து விடுகின்றார்கள். தினமும் ஒரு கோவிலுக்கோ, மசூதிக்கோ, தேவாலயத்திற்கோ செல்பவன் ஆன்மிகவாதி என்று நினைப்பவர்களும் உண்டு.இன்னும் சிலர் சமஸ்கிருதத்தில் உள்ள சில ஸ்லோகங்களை துல்லியமாக உச்சரிப்பவர்களை ஆன்மிகவாதிகள் என்று அடையாளம் காட்டுவார்கள்.பகவத் கீதை, குரான்,பைபிள் போன்ற மத நூல்களைக்  கரைத்துக் குடித்தவர்கள் தான் தலை சிறந்த ஆன்மிகவாதிகள் என்று வாதிடுபவரும் உண்டு. பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பவர்கள் தான் ஆன்மிகவாதிகள் என்று ஒரு சாரார் நினைக்கின்றனர். தான் சார்ந்த மதம் தான் சிறந்தது, ஏனைய மதங்கள் எல்லாம் குப்பை என்று நினைக்கும் மதத்  தீவிரவாதிகள்  தான் உயர்ந்த ஆன்மிகவாதிகள் என்று அடித்துப் பேசுபவர்களும் உண்டு. தாடி வைத்தவரெல்லாம் ஆன்மிகவாதிகளா? யார் உண்மையான ஆன்மிகவாதி? மேலே படியுங்கள்......




நாம் புறத் தோற்றத்திற்கு தேவைக்கு அதிகமான மரியாதையும் மதிப்பும் கொடுக்கின்றோம் என்பது நிஜம். அதனால் தான் நாம் பலப் போலிச் சாமியார்களையும், மத குருமார்களையும் கடவுளுக்கு நிகராய் பாவித்து பூஜிக்கின்றோம். அவர்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வரும்போது அதிர்ச்சி அடைகின்றோம்.

யார் உண்மையான ஆன்மிகவாதி?

உண்மையான ஆன்மிகவாதி என்பவன் தன்னை அறிந்தவன். தன்னுள் உள்ள அந்த 'இறை சக்தியை' உணர்ந்தவன்.இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் நேசிப்பவன். எல்லோரையும் சமமாக பாவிப்பவன் தான் ஆன்மிகவாதி, எல்லா மதங்களையும், மதத்தாரையும்  நேசிப்பவன் ஆன்மிகவாதி.பணத்திற்கும், புகழுக்கும் அடிமையாகாதவன் ஆன்மிகவாதி. தனக்கு கீழ் ஆயிரக்கணக்கான சிஷ்யர்களை அடிமைப் படுத்தி வைத்திருப்பவன் ஆன்மிகவாதி அல்ல. தன்  மதத்தை மற்றவர்களின் மீது திணிப்பவன் உண்மையான ஆன்மிகவாதியாக இருக்க முடியாது.

சுருங்கச் சொல்வதென்றால், தன்னுள் உள்ள 'இறை சக்தியை' உணர்ந்தவன் ஆன்மிகவாதி, எல்லா உயிர்களையும் நேசிப்பவன் ஆன்மிகவாதி. வெற்றியையும், தோல்வியையும், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் பக்குவம் பெற்றவன் தான் உண்மையான ஆன்மிகவாதி. அது சரி, அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? அவர்கள் பெரும்பாலும், எங்கோ ஒரு மூலையில், உலகத்திற்கு அதிகம் தெரியாதவர்களாகத் தான் எளிமையாக வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.

வாழ்க ஆன்மிகம்!

வாழ்க வளமுடன்!

யோகா வெறும் வியாபாரமாகி விட்டதா

இறக்கத்தானே பிறந்திருக்கின்றோம்?

Post a Comment

 
Top