மனிதன் இன்று நிறைய நடிக்கத் தொடங்கி விட்டான் என்றே சொல்ல வேண்டும். முதன் முதலில் ஆடையை உடம்பில் சுத்த ஆரம்பித்த பொழுது தான் அவனின் முதல் நடிப்பு சிறு விழுதாய் ஆரம்பித்திருக்க வேண்டும். அது வளர்ந்து, வளர்ந்து இன்று பெரிய ஆலமரமாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இன்று மனிதன் பெரும்பாலான நேரங்களில் நடித்துக் கொண்டும் சில நேரங்களில் மட்டுமே வெளிப்படையாக,உண்மையாக  இருக்கின்றான். அவன்,  சில இடங்களில் பணக்காரன் போல் தெரிய ஒரு முகமூடி அணிகின்றான். வயதானவன் இளமையாகத் தோன்ற ஒரு முக மூடி, படித்தவன் போல் ஒரு முக மூடி, ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தவன் போல் ஒரு முக மூடி, பெரிய ஒழுக்க சீலன் போல் ஒரு முக  மூடி, அறிவு ஜீவி போல் ஒரு முக மூடி, தைரியசாலி  என்று .எத்தனை முகமூடி  தான் அணிவாயடா சாமி! 


மனிதன் இன்று பணத்திற்கும், பதவிக்கும், புகழுக்கும்,அதிக மரியாதைக்கு கொடுக்கத்தொடங்கி விட்டான் என்பது நாம் அறிந்ததே. இன்று மனித வாழ்க்கை நிறைய பொய்யும், கொஞ்சம் மெய்யுமாய் மாறித் தான் போனது. சில இடங்களில், கௌரவத்தைக் காப்பாற்ற முக மூடி அணிய வேண்டியிருக்கின்றது, சில இடங்களில், நல்ல பெயர் எடுப்பதற்கும், சில இடங்களில் கெட்டிக்காரனாக காட்டிக் கொள்வதற்கும், அறிவு ஜீவியாக தோற்றமளிப்பதற்கும் நாம் நிறையவே நடிக்க வேண்டியிருக்கின்றது.

இன்றைய நவீனயுகத்தில்  முற்றிலும் வெளிப்படையாக  வாழ முடியுமா? அது சாத்தியமா? தேவையா? சில உண்மைகள் நன்மைகளை விட தீமைகளை அதிகமாய் விளைவிக்கக் கூடியவை. ஆதலால், சில சமயங்களில், நாம் நடிகனாக மாறி நடிக்கத்தான் வேண்டும். 

குடும்பங்களில், குழப்பங்கள் இல்லாமலிருக்க, மற்றவர்களின் மரியாதையைப்  பெற, சண்டைகள் மூளாமலிருக்க சில முகமூடிகளை   நாம் அணியலாம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவற்றை நாம் 'டானிக்' போல் பயன்படுத்த வேண்டும். 'டானிக்' நமக்கு மேலும் சக்தி கொடுக்கும் உணவாகலாம் அளவோடு பயன்படுத்தும் வரை. ஆனால் அதுவே உணவாக முடியாது. அது போல், தகுந்த முகமூடிகளை அளவோடு பயன்படுத்தினால் அது இன்றைய வாழ்க்கையை சரியாக எடுத்து செல்ல உதவும் என்றே நினைக்கின்றேன்.

வாழ்க வளமுடன்!

நம்பிக்கை தான் வாழ்க்கை 

பணப் பிரச்சினைக்குத் தீர்வு 

Post a Comment

 
Top