போலிகளின் ஆதிக்கம்: இன்று நம் நாடு ஒருபுறம் உலகமயமாய் ஆகி வருகின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான். ஆனால், மற்றொருபுறம் போலியான உண்மைகளும் மலிந்து வருகின்றன என்பது தான் கசப்பான உண்மை. எங்கும் போலித்தனம், எதிலும் நடிப்பும் பொய்மையும் ஓங்கி நிற்கும் அவலம். பொய்மையும், போலித்தனமும் இப்படி கோலோச்சக் காரணம் தான் என்ன? மனிதன், காசுக்கும், பதவிக்கும், புகழுக்கும் அடிமைஆகிப்போனதால் தான் என்றால் அது மிகையாகாது, அல்லவா? அன்பும், உயர் பண்புகளும், ஆன்மிகமும் மதிப்பாய் இருந்த காலம் சில நூற்றாண்டுகளில் மாறிப் போய் இன்று போலிகளும், பொய்மைகளும் விஸ்வரூபம் எடுத்து ஜொலிக்கின்றன.
எது போலித்தனம்? ஏதோ ஒரு நன்மை அடையும் பொருட்டு உண்மையை நசுக்கி விட்டு பொய்மையை வெளிக் காட்டுவது தான் போலித்தனம் எனலாம். பதவியில் இருக்கும் எத்தனை அரசியல்வாதிகளுக்கு எத்தனை ஆயிரம் பேர் கூழைக் கும்பிடு போடுகின்றனர்? காலில் விழும் அரசியல்வாதிகள், தரையில் உருளும் அரசியல்வாதிகள், மண் சோறு சாப்பிடும் அரசியல்வாதிகள் என்று எத்தனை எத்தனை போலியான விஷயங்கள் இன்று சமுதாயத்தை "ப்ளேக்" போல் பீடித்திருக்கின்றன? போலியான மரியாதை, போலியானஅன்பு, போலியான ஒழுக்கம், போலியான பாராட்டு, போலியான மகிழ்ச்சி என்று போலிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. அவற்றில் சிலவற்றை மட்டும் சற்றே இங்கே பார்ப்போம்.
உண்மைகளை வென்று விடும் போலிகள்: பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் பெறும் போலி மரியாதையைப் பார்த்தோம். அதே போல், பதவியில் இருக்கும் அதிகாரிகளும் போலி மரியாதையைப் பெறுகின்றனர். அதை விடக் கேவலம் அன்பும் இன்று போலியாகிப் போனதுதான். காதல் கூட இன்று பொருளையும் உத்தியோகத்தையும் பார்த்து தானே வருகின்றது? பணம் இல்லாத கணவனை எத்தனை பெண்கள் பாசத்துடன் பார்ப்பார்கள்? சொத்து சேர்க்காத தந்தையிடம் எத்தனை பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள்? போலியான ஒழுக்கம் தான் எங்கும் தெரிகின்றது. திரை மறைவில் மதகுருமார்கள் கூட ஒழுக்கம் தவறி நடப்பதை அன்றாடம் பார்க்கின்றோம். எத்தனை பேரை நாம் போலியாகப் பாராட்டுகின்றோம்? அவ்வளவு ஏன்? இன்று நம்மிடம் இருப்பது உண்மையான மகிழ்ச்சி தானா? அது கூடப் போலியாகிப் போனது ஏன்?
உண்மைகளே இல்லையா? இன்று உலகில் உண்மைகளே இல்லையா என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? உண்மைகள் என்றும் முற்றிலும் அழிந்து விடாது. தாயின் அன்பு,
குழந்தையின் சிரிப்பு, இயற்கை, நிர்வாணம் இவற்றில் என்றுமே போலித்தனம் இருக்காது.
முற்றிலும் உண்மையாக வாழ முடியுமா? இந்த கலியுகத்தில், பொருள் சார்ந்த உலகத்தில் நாம் முற்றிலும் உண்மையாக வாழ முடியாது என்பது உண்மையே. இருந்தாலும், ஒரேயடியாக போலித்தனத்தில் முழுகி விடாமல் கொஞ்சமாவது உண்மையாக -நாம், நாமாக வாழ, முயல வேண்டும் என்றே நினைக்கின்றேன். வாழ்க வளமுடன்!
Post a Comment