எது கெட்ட பழக்கம்?  இந்த கேள்வியை நீங்கள் பலரிடம் கேட்டால் பலவிதமான பதில்கள் உங்களுக்கு கிடைக்கும் என்பது நிச்சயம். கஞ்சா குடிப்பதை நல்ல பழக்கம் என்று நினைப்பவர்களும் உண்டு. காபி குடிப்பதையே தீயப் பழக்கமாக கருதுபவர்களும்  உண்டு என்பது தானே நிஜம்? என்னைப்  பொறுத்தமட்டில், உடலுக்கோ அல்லது மனதிற்கோ  தீமை விளைவிக்கும் எல்லா பழக்கங்களும் தீய பழக்கங்களே. தீய பழக்கங்கள் இல்லாதவர்கள் இவ்வுலகில்  எவருமே இல்லை எனலாம். என்னிடமும் சில தீய பழக்கங்கள் இருந்தன. பெரும்பாலும் அவற்றை எல்லாம் நீண்ட நாட்களுக்கு முன்பே நீக்கி விட்டேன் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும், இன்னும் என்னால் விட முடியாத கெட்ட பழக்கங்கள் சில உள்ளன. அவற்றை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். மேலே படியுங்கள்......


தீய பழக்கம் என்றவுடன் நான் ஏதோ பெரிய குடிகாரன் என்று நினைத்து இருப்பீர்களாயின், உங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதை என்னால் தவிர்க்க முடியாது என்று தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். நான் சொல்ல நினைப்பது என்னவென்றால் மன்னிக்க மறுக்கும் என் மனம் பற்றி தான். நான் என்றுமே எனக்கு உதவி செய்தவர்களை மறப்பதில்லை. அதே சமயம் பிறர் எனக்கு செய்த தீங்குகளையும்  என்னால் எளிதில் மறக்க முடிவதில்லை. யானையைப் போல் பகைமையை நினைவில் வைத்து இருப்பது தவறு என்று தெரிந்தும் என்னால் என்னை மாற்றி கொள்ள முடியவில்லை இன்று வரை. மன்னிப்பதற்கு மஹா மன வலிமை வேண்டும். மன்னிப்பவர்கள் தான் சந்தோஷமாக வாழ முடியும். பிறர் நமக்கு செய்த தீமைகளை மறக்க வேண்டும். அவர்களை மன்னிக்க வேண்டும். அது தான் நம் மனஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பது  எனக்கு நன்றாகவே தெரிந்துதானிருக்கிறது. இருந்தாலும்.......

இன்னொரு கெட்ட பழக்கம் -சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்ப்பது. மேலும் இரவில் நேரம் கெட்ட நேரத்தில் நொறுக்குத் தீனி தின்பது. இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பது போன்ற இவைதான் என்னிடம் இருக்கும் தீய பழக்கங்களாக நான் கருதுகிறேன். 

மேற்கண்ட எல்லா தீய பழக்கங்களையும் விடுவதற்கு நான் முயன்று கொண்டு தான் இருக்கின்றேன். அதில் நான் வெற்றி பெரும் நாள் தொலைவில் இல்லை என்று மட்டும் உறுதியாக சொல்லி முடிக்கின்றேன்.

வாழ்க வளமுடன்!

நம்பிக்கை தான் வாழ்க்கை 

நேர்மையானவர்கள் இன்று  இருக்கின்றார்களா?

Post a Comment

 
Top