பணம் தான் வாழ்க்கையில் பிரதானமாக விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பணத்தினால் சுகமான வாழ்க்கை வாழ முடியும். வாழ்வின் எல்லாப் பிரச்சினைகளையும் பெரும்பாலும் பணத்தினால் நாம் தீர்த்து விட முடியும் என்பது நிஜம். அதனால் தான் இந்த உலகை பணக்காரர்களின் உலகம் (It's a richman's world) என்கின்றார்கள். பணம் உள்ளவனை உலகம் அளவுக்கு அதிகமாகவே மதிக்கத்தான் செய்கின்றது. பணம் இல்லாதவனை பிணத்திற்கு ஒப்பாகவே உலகம் உதாசீனப்படுத்துகிறது.
ஆகவே பணம் நாம் எல்லோரும் சம்பாதிக்கத் தான் வேண்டும். ஆனால் பணத்தை நேர்மையான வழியில் சம்பாதிக்க முடியுமா? இன்றைய கலியுகத்தில் 100% நேர்மையாக இருப்பவர்கள் வாழவே முடியாது என்கின்ற நிலையே உள்ளது. அவ்வளவு நேர்மையானவர்கள் வேலையில் இருந்தால் ஒரு நாள் வேலையை இழக்க நேரிடுகிறது.தொழில் செய்பவர்கள் 100% நேர்மையாக இருந்தால் நஷ்டம் அடைந்து தொழிலை கை விடும் நிலை ஏற்படும் என்பதை 200% உத்திரவாதத்துடன் சொல்லலாம்.
ஓரளவுக்கு நேர்மையாக இருந்து ஓரளவுக்கு சம்பாதிக்கலாம் என்பது தான் நிதர்சனம். அப்படி என்றால் பெரும் பணக்கர்கள் எல்லாரும் நேர்மையற்றவர்கள் தானா என்கின்ற கேள்வி எழுகிறது அல்லவா? ஆம். பெரும் பணம் சம்பாதிக்க வேணுமென்றால் சில பல சமரசங்களை செய்தாக வேண்டும். போரில் வெற்றி ஒன்று தான் பிரதானம். அது போல் தொழிலில் லாபம் ஒன்று தான் முக்கியம். மற்றவை எல்லாம் பின் தள்ளப்படும் என்பது உண்மை.
பெரும் பணம் ஈட்டியவர்கள் எல்லாம் சந்தோசமான அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தானே?
பில்கேட்ஸ் போன்ற சில பணக்காரர்கள் நிறைய தர்ம காரியங்கள் செய்கின்றார்கள் என்பது ஆறுதலான விஷயம்.
கூட்டி கழித்துப் பார்த்தால் தேவைக்கு அதிகமாக சம்பாதிப்பது தவறாகவே தோன்றும். அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய, மற்றும் அவசரக் காலங்களுக்கு என்று கொஞ்சம் பணம் சம்பாதித்து சேமித்தால் போதும் என்றே நினைக்கின்றேன். இது சுய முன்னேற்ற வழிகாட்டிகள் கருத்துக்களுக்கு நேர் எதிராக இருக்கலாம்.
இவ்வுலகில் எத்தனை வருடங்கள் நாம் இருந்து விட முடியும்? இருக்கும் இந்த குறுகிய காலத்தில், நாம் அமைதியாக சந்தோசமாக வாழவேண்டும் அல்லவா?
கூடிய மட்டில் நேர்மையாக வாழ்ந்து முடிந்த மட்டில் நேர்மையாக சம்பாதித்து மற்றவர்களை நேசித்து, இயற்கையை ரசித்து ஆராதித்து வாழ்வது தான் சாலச் சிறந்தது.
வாழ்க்கையில் பெரும் பணக்காரர்கள் ஆவது தான் பெரும் லட்சியம் என்று நினைக்கக் கூடாது. பெரும் பணக்காரர்களாக ஆக வேண்டும் என்றால் பெரும்பாலும் நேர்மையை கை விட வேண்டி இருக்கும் என்பதை மறக்கக் கூடாது. மேலும் பெரும் பணக்காரர்கள் எல்லோரும் பெரும்பாலும் நிம்மதியாக வாழ்வதில்லை என்பதையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும். நல்லவர்களாக வாழ்வோம். நிம்மதியாக வாழ்வோம். சந்தோசமாக வாழ்வோம்.
நம்பிக்கை தான் வாழ்க்கை
பணப் பிரச்சினைக்கு தீர்வு என்ன?
Post a Comment