'யோகா'  ஒரு நல்ல கலை என்பதிலோ அது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் மிகவும் நல்லது என்பதிலோ மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் இன்று தெருவுக்கு இரண்டு அல்லது  மூன்று யோகா நிலையங்கள் 'டாஸ்மாக்' கடைகளை  மிஞ்சும் வண்ணம் புற்றீசல்கள் போல் முளைத்து வருகின்றன. அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகிப் போகும் போது  யோகா நிலையங்கள் எம்மாத்திரம்? இன்று யோகா என்பது மக்கள் நலத்திற்காக என்பது மாறி, பணம் சம்பாதிப்பதற்காக என்ற நிலை வந்து விட்டது. கல்வியும், மருத்துவமும் வியாபாரமாகி விட்ட இந்த நாட்டில் யோகா வியாபாரமாகிப் போனதில் என்ன வியப்பு இருக்க முடியும்?   'யோகா' வெறும் வியாபாரமாகி விட்டதா? மேலே படியுங்கள்.....


இந்தியாவில் சிறப்பே அதன் ஆன்மிக பாரம்பரியம் தான் என்றால் அது மிகையாகாது. நமது பண்டைய யோகிகளும், முனிவர்களும் பல அரிய மற்றும் அற்புதமான விஷயங்களைக் கண்டு பிடித்து உலகிற்கு அருளியவர்கள். செயற்கரிய சாதனைகளை நடத்திக் காட்டியவர்கள். அவர்களின் அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் இந்த  அற்புதமான யோகக் கலை ஆகும்.

'யோகா' உடலை மட்டும் அல்ல, மனதையும் உறுதியாக்குகிறது என்பது நிஜம். மனதையும், உடலையும் ஏன் உயிரையும் ஒருங்கிணைப்பது தான் யோகக் கலை. யோகா என்பது உடல் பயிற்சி, மூச்சு பயிற்சி மற்றும் தியானம் ஆகிய இம்மூன்றும் அடங்கியது ஆகும்.


இன்று யோகா குருக்கள் மக்களின் நலனை விட பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளனர்.  மேலும், அவர்கள் தங்களை  கடவுள் ஸ்தானத்தில்  பார்க்கும் படி அவர்களை 'மூளை சலவை' செய்து விடுகின்றனர்.   சிஷ்யர்களை அடிமைகளைப் போல் ஆக்கி விடுகின்றனர். மேலும்  குருக்களிடம் தான் முறையாக 'யோகா'  கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அப்படி குருக்களிடம் கற்றுக் கொள்ளாமல் புத்தகங்களைப் படித்தோ அல்லது வீடியோக்களைப் பார்த்தோ கற்றுக் கொண்டால் தீய விளைவுகள் ஏற்படும் என்றும் அச்சுறுத்தி விடுகின்றனர்.

'யோகா'  சம்பந்தப் பட்ட பல உணவு மற்றும் இதரப் பொருட்களைத்  தயாரித்து விற்கவும் செய்கின்றனர்.  தரமான பொருட்களை நியாயமான விலையில் தயாரித்து  விற்றால் அது .ஒன்றும்  தவறில்லை. ஆனால் வெறும் வியாபாரத்தை மட்டுமே  குறிக்கோளாக கொண்டு அந்த நிறுவனங்கள் செயல்படும் போது 'யோகா' வின் புகழ் பங்கமாகிறது என்பது நிஜம்.  

கல்வி, மருத்துவம் மற்றும் யோகா  போன்ற முக்கியத் துறைகளில் இருப்பவர்கள் சேவையைப் பிரதானமாக கருதி செயல் பட வேண்டும்.  வியாபாரிகள் போல் அவர்கள் வெறும் லாபத்தை முன்னிறுத்தி செயல் படக் கூடாது. 

'யோகா' வை மக்களிடம்  கொண்டு சேர்ப்பதற்காக சற்றே வியாபாரம் செய்யலாம். ஆனால் 'யோகா' வே வெறும் வியாபாரமாகி விடக் கூடாது என்பதே எனது கவலை ஆகும்.

வாழ்க வளமுடன்!

   சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் அற்புத பலன்கள் 

ஈ.ஸ்.பி டெலிபதி சக்தி உண்மையா? 

Post a Comment

 
Top