'ஈகோ' என்னும் பேய் பிடிக்காதவர் யார் உளர் இவ்வுலகில்? இன்று நமக்கு பெரும்பாலும் ஏற்படும் துன்பங்களுக்கெல்லாம் முக்கிய காரணமே ஈகோ தான் என்றால் அது  மிகையாகாது. அகங்காரத்தினால் சாம்ராஜ்ஜியங்கள் சாய்ந்திருக்கின்றன. உறவுகள் பகையாக மாறியிருக்கின்றன. ஏன் திருமண உறவுகளே அழிந்திருக்கின்றன. அகங்காரமே இல்லாதவர்களை இவ்வுலகில் இருக்கின்றார்களா? மேலே படியுங்கள்.......


அகங்காரமே இல்லாதவர்களை இவ்வுலகில் பார்க்கவே முடியாது என்றே சொல்ல வேண்டும். அகங்காரம் துளியும் இல்லாத இரண்டு பேர்  என்று யாரை சொல்லலாம் தெரியுமா? கருவறையில் இப்பூவுலகை காண காத்திருப்பவனும்  கல்லறையில் ஆழ்ந்த நித்திரையில் இருப்பவனும் தான். அகங்காரம் ஒரு கட்டுப் பாட்டிற்குள் இருக்கும் வரை   அது பெரிய பாதிப்புகளை  ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஒரு சிலர் அகங்காரத்தின் உச்சக் கட்டத்திற்கே போய் விடுகின்றனர். அதனால் ஒரு நாள் அவர்கள் பெரும் வீழ்ச்சியை நிச்சயம் சந்திப்பார்கள் என்பது உறுதி. அகங்காரம் அதிகமாய் உள்ள ஒரு சிலர் வெற்றியுடன் இருப்பதாக தோன்றும். அது வெறும் மாயை தான். அவர்களும் உண்மையில் உள்ளுக்குள் நிம்மதியின்றி தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பது நிஜம்.

நாம் நம் குழந்தைகளிடம் அதிகம் 'ஈகோ' பார்ப்பதில்லை. ஆனால் வாழ்நாள் முழுவதும் கூட வரப் போகின்ற  வாழ்க்கைத் துணையிடம் எல்லோரும் 'ஈகோ' அதிகம் பார்க்கின்றனர் என்பது தான் கசப்பான உண்மையாகும். சிறு குழந்தைகளிடம் 'ஈகோ' சற்றும் இருப்பதில்லை. நாம் தான் அவற்றிற்கு அகங்காரத்தை கற்றுக் கொடுக்கிறோம். அதனால் குழந்தைகள் பெரிவர்களாகும் போது அகங்காரத்தில் பி ஹெச் டி பெற்று விடுகிறாகள் என்பது தான் நிதர்சனம்.

ஈகோ எத்தனையோ தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது எனலாம். முக்கியமான தீமை கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டைகளே ஆகும். எத்தனையோ விவாகரத்துகளுக்கு ஈகோ தான் காரணம்  என்று அடித்து சொல்லி விடலாம். ஈகோ பார்ப்பவர்கள் யாரிடமும் உதவி கேட்க தயங்குவார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கையில் பல நல்ல வாய்ப்புகளை  இழப்பர் என்பது நிஜம். ஈகோவினால் ஒருவரது பதவி பறி  போகலாம். நண்பர்கள் பகைவர்களாகலாம். சாம்ராஜ்ஜியங்கள் சரியலாம். அகங்காரம் உடையவர்களுக்கு உண்மையான நண்பர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணம் அல்லது பதவி இருந்தால் அதற்காக ஒரு சிலர் அவர்களோடு உறவாடுவர். ஆனால் அகங்காரம் பிடித்தவர்களுக்கு  ஒரு துன்பம் அல்லது தோல்வி வந்தால் அவர்கள் உள்ளுக்குள் மகிழ்வார்கள். அவர்கள் மரித்தால் உண்மையான கண்ணீர் சிந்த ஒரு நாதியும் இருக்காது.

அகங்காரம் என்னும் அரக்கனை உங்கள் மனதில் இருந்து வேரோடு அழியுங்கள். இறைவன் படைப்பில் எல்லோரும் சமமே. 

வாழ்க வளமுடன்! 

                                      நம்பிக்கை தான் வாழ்க்கை 


நேர்மையானவர்கள் என்று இருக்கிறார்களா?

Post a Comment

 
Top