ஒரு நாளாவது சொந்த வீட்டில் வாழ்ந்து சாக வேண்டும் என்பது தான் இன்று பெரும்பாலான தமிழர்களின் கனவாக இருக்கிறது. சுத்தமான சுகாதாரமான நேர்மறை அதிர்வு (Positive vibration) உள்ள வீட்டில் வாழ வேண்டும் என்பது தான் முக்கியம் என்பது ஒரு புறம் இருக்க, சொந்த வீட்டு கனவும் வாழ்க்கையின் நல்ல இலட்சியங்களில் ஒன்றாகவே சமுதாயத்தில் பார்க்கப் படுகிறது என்பது நிஜம். வீடு வாங்கும்/கட்டும் யோகம் உங்களுக்கு உங்கள் ஜாதகப்படி உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? மேலே படியுங்கள்.....


பொதுவாக வீட்டு மனை வாங்க மற்றும் புது வீடு வாங்க அல்லது கட்ட, ஒருவரின் ஜாதகத்தில் நாலாம் வீட்டை முக்கியமாக பார்க்க/ஆராய  வேண்டும். மேலும் வீடு, மனை போன்ற 
விஷயங்களை தருபவர் செவ்வாய் ஆவார். நாலாம் வீடு பலம் பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நான்காம் வீடு செவ்வாயின் வீடாக இருந்து  அங்கு செவ்வாய் வீற்றிருந்தால் ஜாதகர் பெரிய வீடு கட்டுவார். அந்த நாலாம் வீடு செவ்வாயின் உச்ச வீடாக இருந்து அங்கு அவர் வீற்றிருந்தால் அரண்மனை போன்ற வீட்டை நிச்சயம் கட்டுவார் எனலாம்.

நான்காம் வீட்டில் சுபாவ சுபர் அல்லது நல்ல ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் இருந்தால் விசேஷம் எனலாம். 4 ஆம் வீட்டில் பாக்கியாதிபதி சுய பலத்துடன் அமர்ந்தால் நல்ல யோகம் எனலாம். அதே சமயம் ராகு கேது சேர்க்கை இல்லாமல் இருக்க வேண்டும்.  4 ஆம் வீட்டு அதிபதி லாப ஸ்தானத்தில் இருந்தாலும் வீடு கட்டும் யோகம் உண்டு. 4 ஆம் வீட்டை நல்ல ஆதிபத்தியம் பெற்ற செவ்வாய் பார்த்தால் வீடு கட்டும் யோகம் உண்டு.

4 ஆம் வீட்டு அதிபதி நல்ல ஆதிபத்தியம் பெற்ற செவ்வாயின் நட்சத்திரத்தில் நின்றால் வீடு கட்டும் யோகம் சிறப்பாக உள்ளது எனலாம். 4 ஆம் வீட்டு அதிபதியும் லக்னாதிபதியும் பரிவர்த்தனை பெற்றாலும் வீடு யோகம் நிச்சயம் உண்டு.

சரி, எப்பொழுது வீடு கட்டும் யோகம் ஒருவருக்கு ஏற்படும்?  4 ஆம் வீட்டு அதிபதி அல்லது செவ்வாயின் தசா புத்திகளில் பெரும்பாலும் வீடு கட்டும் யோகம் ஒருவருக்கு ஏற்படும். அபூர்வமாக ஒரு சிலருக்கு நான்காம் வீட்டில் அமர்ந்த அல்லது பார்த்த கிரகங்களின் தசா புத்திகளில் வீடு கட்டும் பாக்கியம் ஏற்படும்.

ஒரு எச்சரிக்கை: என்ன தான் கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் நீங்கள் கடினமாகவும், புத்திசாலித்தனமாகவும்  உழைத்தால் தான் வீடு கட்ட முடியும். வீடு கட்ட அதிர்ஷ்டம் வேண்டும். அதைத்  தான் ஜாதகத்தில் வீடு கட்டும் யோகம் என்கின்றோம்.

வாழ்க வளமுடன்!


15 எளிய வாஸ்து பரிகாரங்கள் 

சுக்கிர தசை எல்லோருக்கும் நல்லது செய்யுமா?

Post a Comment

 
Top