May 17, 2025 05:51:10 PM Menu
 

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாதிரி. ஒரே கருத்து எல்லா விஷயங்களிலும் உள்ள இருவர் இவ்வுலகில் இருக்கவே முடியாது-அவர்கள் பிறப்பால் இரட்டையர்களாக இருந்தாலும். ஒவ்வொருவரும், வித்தியாசமான விருப்பு, வெறுப்பு உடையவர்கள். உங்களுக்கு முக்கியமானவைகளாகத் தோன்றும் சில விஷயங்கள்  மற்றொருவருக்கு அற்பமாகத் தோன்றும்.  உங்களுக்கு அழகாகத் தோன்றும் ஒரு விஷயம் மற்றொருவருக்கு அசிங்கமாகத தோன்றும் என்பது நிஜம் -அது உலக அழகி 'ஐஸ்வர்யராய்'   ஆகவே இருந்தாலும்.  அப்படி இருக்கும் போது எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து பின் திருமணத்தில் இணையும் ஒரு ஆணும் பெண்ணும் எப்படி சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்க முடியும்? சண்டை என்பது கணவன் மனைவிக்குள் தவிர்க்க முடியாதது. சிலர் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டை அவர்கள் உறவைப் பலப் படுத்தும் என்கிறார்கள். கணவன் மனைவி சண்டை திருமண உறவை உண்மையில் பலப் படுத்துமா? மேலே படியுங்கள்.....


கணவன் மனைவிக்குள் சண்டை இல்லாமல் வாழ்வே முடியாதா? ஏன் முடியாது? அபூர்வமாக ஒரு சில தம்பதியர் சண்டையே போடாமல் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றனர் இன்றும். எப்படி அவர்களுக்கு மட்டும் அது சாத்தியம் ஆகிறது?  அவர்கள் ஒருவர் மீது ஒருவர் நிபந்தனை அற்ற  அன்பு வைத்து இருக்கின்றனர். தங்கள் துணையை அவர்களின் குறை நிறைகளோடு அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் உண்மை. இன்னும் சொல்லப் போனால் அவர்களின் குறைகளைக் கூட அவர்கள் நிறைகளாக இரசிக்கும் பக்குவத்தில் இருப்பார்கள். அப்படியே சிறு சிறு சண்டைகள் போட்டாலும் அவர்கள் அவற்றை நொடிப் பொழுதில் மறந்து மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பி விடுவார்கள். அது எப்படி முடிகிறது அவர்களுக்கு மட்டும்?

அவர்கள் கணவன் மனைவி  உறவுக்கு பெரும் மதிப்பு அளிப்பவர்கள். அவர்களைப் பொருத்தமட்டில் அவர்களது துணை தான் அவர்களது வாழ்க்கையே. அவர்கள் தங்கள் துணையிடமிருந்து அதிகம் எதிர் பார்க்க மாட்டார்கள். ஆனால், அவர்களுக்கு அதிகம் கொடுக்க நினைப்பார்கள். அதற்காக மெனக் கெடுவார்கள். 

ஒவ்வொருவரும் தங்கள் துணையிடமிருந்து அதிகமாக எதிர்பார்த்து திருமணத்தில் நுழைகிறார்கள். தனது கணவன் அல்லது மனைவி தங்கள் வாழ்க்கையை முற்றிலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றி விடுவார்கள் என்ற அதீத கற்பனையோடு திருமணம் செய்துக் கொள்ளுகிறார்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது பெருத்த ஏமாற்றம் அடைகின்றனர். ஒரு கட்டத்தில் வேறு ஒரு நபர் தமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார் என்று தப்புக் கணக்குப் போடுகின்றனர். அவர்கள் 1000 திருமணம் செய்தாலும் முடிவு தோல்வியாகத் தானிருக்கும்.

கணவன் மனைவிக்காகவும் மனைவி கணவனுக்காகவும் வாழ்ந்தால்  சண்டை சச்சரவுகள் எப்படி வரும்?

கணவன் மனைவி சண்டை திருமண உறவைப் பலப் படுத்தும் என்று சிலர் சொல்லுகின்றனர். அதாவது அவர்கள் சண்டையிடும் போது அவர்களின் மனதில் உள்ளவற்றை கொட்டி விடுவதால் அவர்களால் மீண்டும் இயல்பு நிலைக்கு எளிதில் வந்து விட முடியும் என்பது அவர்களின் வாதம். சண்டை போடாமல் மனதிற்குள்ளேயே வைத்து இருந்தால் அது ஒரு நாள் பெரிதாக வெடிக்கும் என்பது அவர்களின் கருத்து. சிறு சிறு சண்டைகளாக இருந்தால் அது சரியாக வரும். பெரிய சண்டைகல் அடிக்கடி  வந்தால் அது உறவை பலப் படுத்தாது. மாறாக உறவை பெரிதும் பலவீனப் படுத்தி விடும் என்பது தான் உண்மை. 

என்னைப் பொறுத்த மட்டில், கணவன் மனைவி இடையே சண்டையே வரக் கூடாது. அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? ரொம்ப எளிது. கணவனுக்கு மனைவிக்கு பிடித்தவை என்னென்ன பிடிக்காதவை என்னென்ன என்று நன்றாகத் தெரியும். அதே போல் தான் மனைவிக்கும் கணவனுக்கு பிடித்தவை என்னென்ன பிடிக்காதவை என்னென்ன  என்பது நன்றாகவேத் தெரியும். கணவன் மனைவிக்கு பிடித்தவற்றை மட்டும் செய்ய வேண்டும். பிடிக்காதவற்றை செய்யவே கூடாது. அதே போல் தான் மனைவியும் கணவனுக்கு பிடித்தவற்றை மட்டும் செய்ய வேண்டும். பிடிக்காதவைகளை செய்யக் கூடாது.

பிடித்தவற்றை செய்கிறீர்களோ இல்லையோ, ஆனால் நிச்சயம் பிடிக்காதவற்றை செய்யவேக் கூடாது.

இது பார்ப்பதற்கு மிகவும் எளிதாகத் தோன்றினாலும் நடைமுறையில் அவ்வளவு எளிதானது அல்ல என்பது நிஜம். எந்த ஒரு வெற்றிக்கும் அல்லது சந்தோஷத்திற்கும் நாம் உழைத்தாக வேண்டும் அல்லவா? உங்களுக்கு உண்மையில் உங்கள் கணவன் அல்லது மனைவியோடு உயிருக்குயிராய் வாழ வேண்டும் என்று நினைத்தால் அதற்காக கொஞ்சம் கஷ்டப் படத்தான் வேண்டும்.

 பிரச்சினை என்னவென்றால் எல்லோரும் தாங்கள் எதுவும் விட்டுக் கொடுக்காமல் தனக்கு மட்டும் தன் துணை எல்லா விஷயங்களிலும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பேராசைப் படுவது தான்.

அப்படி கொஞ்சம் விட்டுக் கொடுத்து மட்டும் வாழப் பழகி விட்டால் வாழ்க்கை சொர்க்கமாகிப் போகும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அவர்களை விட அதிர்ஷ்டசாலிகள் வேறு யாரும் இருக்க முடியாது. எப்படி பட்ட துன்பங்கள் அவர்கள் வாழ்க்கையில் வந்தாலும் அவர்களால் அவற்றை எளிதாக எதிர்கொள்ள முடியும். எந்த நிலையிலும் அவர்களால் சந்தோஷமாக வாழ முடியும். அன்று தான் கல்யாணம் ஆனது போல் அன்னியோன்யமாக என்றும் வாழ முடியும்.

வாழ்க அத்தகைய ஜோடிகள்! கணவன் மனை உறவு என்பது அற்புதமானது. புனிதமானது.அதை விட உயர்ந்தது இவ்வுலகில் எதுவும் இருக்க முடியாது என்பது என் கருத்து.

வாழ்க வளமுடன்!

காமத்தை கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?

திருமணத்தை முடிவு செய்யும் சில விஷயங்கள் 


29 Jun 2015

Post a Comment


  1. "ஆதலினால் காதல் செய்வீர்"

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காதல் எங்கள் மத்தியில் இருந்தது. பின்னர் குழந்தைத் திருமணம் நடைமுறைக்கு வர, எங்கள் மத்தியில் காதல் அருகிவிட்டது. இன்று நாங்கள் காதல் அற்றவர்களாக மாறிவிட்டோம். “ஆதலினால் காதல் செய்வீர்” என அறை கூவியவன் பாரதி.

    ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன், அரசாட்சிகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறிவிட்டது. இந்தியாவில் சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமாக இருந்தன. சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக நாங்கள் காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் உடலுறவு மட்டுமே.

    ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமக்குப் பிடித்த துணையை, தாமே தேடிக் கொள்வதுதான் உண்மையான காதல். வாழ்நாள் பூராக நீடிக்கும் காதல் உறவைத் தேடிக்கொள்ள கடந்த இரண்டாயிரம் வருடங்களாக எங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.

    கல்யாணப் பொருத்தத்தில் சாதி, பணம், சொத்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள், திருமணம் செய்ய விரும்புபவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா? என்று பார்த்தது கிடையாது. ஒருவரை ஒருவர் விரும்புவதற்கு, ஒருவரோடு ஒருவர் பழகாமல் விருப்பம் வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய கல்யாணங்களில் கழுத்தில் தாலி ஏறிய பின்னர்தான் கணவன் மனைவியை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் தமக்கிடையே அன்பைப்
    பகிருந்தோறும், இருவரும் நெருங்கிப் பழகுந்தோறும், உள்ளத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதால் வளரும் ஓர் உறவுதான் உண்மையான காதல்.

    எங்கள் எண்ணங்களோடு இணைவு இல்லாத ஓருவரோடு, சில நிமிடங்களுக்குப் பின் எதையுமே பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவருடன் கல்யாணம் எப்படி வருடக் கணக்கில் தொடர முடியும்?

    பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத் தளம் இல்லாத நிலையில், நம் மத்தியில் கணவன் மனைவிக்கிடையில் வெறுமையான உரையாடல்களுடன் எங்கள் கல்யாணங்கள் எல்லாம் வெறும் ஒப்புக்கு போலியாக வெறும் கடமைக்கு கணவன் மனைவி எனக் குறுகி, சாகும் வரை தொடர்கின்றன.

    கல்யாணமாகி கொஞ்சக் காலம் சென்ற பின் எங்கள் கணவன் மனைவிக்கிடையில் "சாப்பாடு தயாரா?", "பிள்ளைகள் என்ன சாப்பிட்டார்கள்?" என சில சொற்களுக்கு மேல் அவர்களுக்கிடையில் உரையாடும் குடும்பங்கள் மிக மிக அரிது.

    உண்மையான காதலில்தான் அன்பு இருக்கும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதும், குதர்க்கமாகப் பேசுவதும், குத்திக்காட்டுவதும், போலியான உறவுகளில்தான் இருக்க முடியும். கல்யாண வாழ்வில் காதல் இல்லாத காரணத்தால் பல ஆண்கள் விபச்சாரிகளை தேடிப்போனார்கள்.

    நாங்கள் பெரும்பாலும் எங்கள் நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுவோம். கணவன் மனைவிக்கிடையில் காதல் வளராதலால், வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன், தொலைக்காட்சியிலும், கணணித் திரையிலும், கதை புத்தகங்களிலும் வெறும் கற்பனையில் காதலை பார்த்துவிட்டு, நாங்கள் மரணித்துப் போய்விடுகின்றோம்.

    இன்னமும் உண்மையான காதல் என்றால் என்னவென்று எங்களுக்கெல்லாம் தெரியாததால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையயுள்ள நெருக்கத்தையே காதல் என எண்ணி, ஒரு ஆணும் பெண்ணும் சற்று நெருக்கமாக பழக நேர்ந்தாலே அது கல்யாணம் செய்து கொள்வது வரை சென்று விடுகின்றது.

    இறுகிப்போன எங்கள் கலாச்சாரத்தில், இன்னமும் காதல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதனாலேயே, அது இரகசியமானதாகவும், மற்றவர்களால் வேவு பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. இதனால் காதலை நிதானமாக அணுக முடியாத நிலையில், கண்டவுடன் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே, கல்யாணமாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளாக இறுதி வரை தொடர்கின்றன.

    காதலை சரிவர அணுகவும், நிதானமாக முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும், தேவையான அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் தேவை. காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் ஆரோக்கியமான சமூகங்கள் மத்தியில் இருக்கின்றது. பொருத்தமான கணவன் மனைவி உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்.

    – நல்லையா தயாபரன்

    ReplyDelete

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top