வாழ்க்கை ஒரு போராட்டத்தில் தான் எல்லோருக்கும் ஆரம்பிக்கிறது. வெளியான சுமார் 25 கோடி விந்து அணுக்களில் வெற்றி பெற்ற அந்த ஒரு விந்து அணு தான் நாம் எல்லோருமே என்பது உண்மை தானே? வாழ்க்கையின் தொடக்கத்தில் ஆரம்பிக்கும் இந்த போராட்டம் முடிவில்லாமல் நீண்டு இறுதி வரை வருகிறது என்பது நிஜம். வாழ்க்கை ஒரு முடிவில்லா போராட்டமா? மேலே படியுங்கள்......


போராட்டமே இல்லாத வாழ்க்கை இவ்வுலகில் இல்லை என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். வாழ்க்கையில் துன்பங்கள் வரும் போது அவற்றை எதிர் கொள்ளவும், சமாளிக்கவும் இந்த மனத் தெளிவு உதவும். போராட்டங்கள் வாழ்க்கையில் வரலாம்; ஆனால் போராட்டமே வாழ்க்கை ஆனால்? துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலருக்கு அவர்கள் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் வாழ்க்கையே போராட்டமாக அமைந்து விடுகிறது.

போராட்டங்கள் இடை விடாது தொடரும் போது மனம் தளர்வது இயல்பானது தான். வாழ்க்கையே வெறுத்து விடும். உறவுகள் கூட கசக்கும். எதற்காக இவ்வளவு துன்பங்களுடன் வாழ வேண்டும் என்று கூட மனம் கேள்வி எழுப்பும். கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையே அது அசைத்துப் பார்க்கும். எல்லோரும் நம்மை கை விட்டாற்போல் தோன்றும். 

இந்த மாதிரியான கடினமான சமயங்களில், நாம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மனதை சோர்ந்து போக விடக் கூடாது. எது நடந்தாலும் பரவாயில்லை என்ற மன உறுதியோடு வாழப் பழக வேண்டும். மிஞ்சி மிஞ்சி போனால் அப்படி என்ன நடந்து விடப் போகிறது? மரணம் ஏற்படலாம்? இவ்வுலகில் சாகாதவர் யார் உளர்? மரண பயம், மற்றவர்கள் முன் நம் கவுரவம் குறைந்து விடுமோ என்ற பயம், அவமானம் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் இவற்றை விட்டு ஒழியுங்கள்.

வாழ்க்கை எளிதாகி விடும். பிரச்சினைகளை எதிர் கொள்ளும் மன வலிமை ஏற்படும். கடின உழைப்பைத் தொடர்ந்தால் வெற்றி நிச்சயம். அதற்குப் பின் கேலி பேசியவர் எல்லாம் புகழத் தொடங்குவர். தொட்டதெல்லாம் துலங்க ஆரம்பிக்கும். வாழ்க்கை வசந்தமாகும். முடிவில்லாத போராட்டங்களும் ஒரு நாள் முடிந்தே ஆக வேண்டும்.

வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top