மனித மனத்தின் சக்தி அபரீதமானது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்கள் மனம் தான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. உருவாக்குகிறது. அல்லது அழிக்கிறது. உங்கள் வெற்றியும், தோல்வியும், உங்களின் மனதின் எண்ணங்களைப் பொறுத்தே இருக்கும் என்பது நிஜம். உங்கள் மனம் உங்களின் எஜமானனா? அல்லது வேலைக்காரனா? மேலே படியுங்கள்.....
மனம் ஒரு குரங்கு என்று சொல்லலாம். அது அவ்வளவு எளிதில் அடங்காது. மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது சற்று சிரமம் தான். வெற்றி சூத்திரம் மனதை கட்டுப்படுத்துவதில் தான் உள்ளது. எளிமையாக சொல்லவேண்டுமென்றால் மனத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள். கட்டுப் படுத்த முடியாதவர்கள் தோற்கிறார்கள். அவ்வளவு தான்.
இவ்வுலகம் கவர்ச்சிகள் மிகுந்தது. மனமோ அலைபாயக்கூடியது. அதனால் தான் நிறைய பேர் சிற்றின்பங்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். புகைபிடிப்பது, மது அருந்துவது, காம கேளிக்கைகள் என்று மனம் எளிதில் சிற்றின்பங்களில் ஈடுபட்டு விடுகிறது. இவைகளினால் கிடைக்கும் இன்பம் தற்காலிகமானது தான். இதை பலர் உணர்வதே இல்லை. சிலர் உணர்ந்தாலும், அவர்களால் மனத்தைக் கட்டுப் படுத்த முடிவதில்லை. அதனால் அவர்கள் தொடர்ந்து அவைகளில் ஈடுபடுகிறார்கள்.
மனதை நீங்கள் ஆள வேண்டும். மனம் உங்களை ஆள விட்டு விடக் கூடாது. மனம் என்னும் சண்டிக் குதிரை இழுக்கும் இழுப்பிற்கெல்லாம் இடம் கொடுத்து விட்டால் பின் தோல்வியும், துயரங்களும்,ஏமாற்றங்களும் தான் மிஞ்சும்.
மனம் உங்களின் வேலைக்காரனாக செயல் பட வேண்டும். மனம் உங்களின் எஜமானனாகி விட்டால் பின் வாழ்க்கை சூனியமாகிவிடும். மனதை அடக்குங்கள். உங்கள் மனம் உங்களின் கட்டுப் பாட்டிற்குள் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
மனம் ஒரு சிறந்த வேலைக்காரன். ஆனால் மோசமான எஜமானன். இந்த உண்மையை மறந்து விடாதீர்கள். மனம் என்னும் முரட்டுக் குதிரையை அடக்கப் பழகுங்கள்.
வாழ்க வளமுடன்!
Post a Comment