இவ்வுலகில் கவலை இல்லாத மனிதர்கள் யார்?  எல்லோருக்கும் கவலைகள் உண்டு. ஆனால் கவலையே வாழ்க்கையாகி போனால் வாழ்க்கை அர்த்தமிழந்து போய் விடுமல்லவா? உங்கள்  கவலைகளுக்கான உண்மையான காரணங்கள் என்ன? அக்கவலைகளைப் போக்குவது எப்படி? மேலே படியு ங்கள் .......


ஆசையே மனிதனின் துன்பங்களுக்கு காரணம் என்றார் புத்தர். ஆனால் ஆசையே இல்லாத நிலை என்று ஒன்றுமேயில்லை. ஆசைகளைத் துறக்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அதுவும் ஒரு வகையான ஆசை தானே? ஆசைகள் இருக்கலாம். புத்தர் சொன்னது தவறான ஆசைகளையும்,  பேராசைகளையுமே என்று நினைக்கின்றேன். நீங்கள் வசிக்க நல்ல வீடு ஒன்று வாங்க ஆசைப் படலாம் அதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால் 10 பெரிய வீடுகள் வேண்டும் என்றோ நான் மட்டும் தான் வீடு கட்ட வேண்டும் என்னை சுற்றி உள்ளவர்கள் யாரும் வீடு கட்டி விடக் கூடாது என்று நினைப்பதோ நிச்சயம் தவறான ஆசை தான்.

வேண்டுமென்றால் இப்படி சொல்லலாம். நிறைவேற்ற முடியாத ஆசைகள், மற்றும் பேராசைகள் வாழ்வில் துன்பங்களையே தரும். எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் போது அவை நிறைவேறாமல் போகும் போது கவலையே மிஞ்சுகிறது. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து  மற்றவர்களுக்காக வாழும் போது கவலையே மிஞ்சுகிறது.

எத்தனையோ பயங்கள் நம் வாழ்வை துன்பமயமாக்குகின்றன. நம் கவலைகளுக்கெல்லாம் பெரும்பாலும் சில பயங்களே காரணமாக இருக்கின்றன. சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் போய் விடுமோ என்ற பயம், உலகம் நம்மை பற்றி என்ன நினைக்குமோ என்ற பயம், வேலை போய் விடுமோ என்கின்ற பயம், காதல் நிராகரிக்கப் படுமோ என்ற பயம், திருமண உறவு முறிந்து விடுமோ என்ற பயம், ஆரோக்கியம் கெட்டு விடுமோ என்ற பயம், நமது அன்புக்குரியவர்களுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது துன்பங்கள் வந்து விடுமோ என்ற பயம், எல்லா பயம் சாலைகளும் துன்பம் என்னும் சேரும் இடத்தையே சென்றடைகின்றன.

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தால் கவலைகள் எட்டிப் பார்க்கத்தானே செய்யும்? துன்பங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதி என்பதையும், துன்பங்களே இல்லாத வாழ்க்கை இவ்வுலகில் இல்லை என்பதையும் அறியாததால் தான் கவலைகள் வருகின்றன.

 தவறான ஆசைகள், பேராசைகள், சக்திக்கு மீறிய எதிர்பார்ப்புகள், தேவையற்ற பயங்கள், பிறரோடு தம்மை ஒப்பிட்டுப் பார்த்தல், வாழ்க்கையின் தத்துவங்கள் புரியாமல் வாழ்தல் ஆகியவை தான் உங்கள் துன்பங்களுக்கு பெரும்பாலும் காரணங்களாக அமைகின்றன.

துன்பங்களை நீக்கி வாழ்வது எப்படி என்பதை வேறொரு வலைப் பதிவில் உங்களோடு பகிர்வேன்.

வாழ்க வளமுடன்!

உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கிறதா?

நன்றி கெட்ட உலகமடா சாமி 

Post a Comment

 
Top