பிறந்த குழந்தை இவ்வுலகில் முதலில் பார்ப்பது தன பெற்றோர்களைத் தான். அந்த குழந்தை நல்லது அல்லது கெட்டது ஒவ்வொன்றையும் தன் 
பெற்றோர்களிடமிருந்தே கற்றுக் கொள்ளுகிறது. ஒரு குழந்தையை சரியான முறையில் வளர்த்தால் பெரும்பாலும் அது நல்ல வாழ்க்கையைத் தான் வாழும். குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு அற்புதமான கலை. குழந்தையை அன்பாகத் தான் வளர்க்க வேண்டும். ஆனால் அதே சமயம் சில சமயங்களில் கண்டிப்பாகவும் இருக்க வேண்டும்.  குழந்தைகளின் பேர் உள்ள அபரிதமான அன்பினால் அவர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு அக்குழந்தைகளின் வாழ்க்கையை கெடுக்கும் அன்பான பெற்றோர்கள் எத்தனையோ பேர் இன்று இருக்கத் தான் செய்கிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கக் கூடும். தயவுசெய்து மேலே படியுங்கள்....


ஒவ்வொரு குழந்தையும், பயமில்லாத, நேர்மையான, பொய் சொல்லத் தெரியாத குழந்தையாகத் தான் பிறக்கிறது. பெற்றோர்கள் தான் ஒரு குழந்தையை பயந்தாங்கொள்ளியாக, நேர்மையற்றவனாக, தன்னம்பிக்கை இல்லாதவனாக  வளர்த்து விடுகிறார்கள். அதற்கு பொய் சொல்லவும் அவர்கள் தானே கற்றுக் கொடுக்கிறார்கள்? இன்னும் சொல்லப் போனால் அவர்கள் உடல் நலத்தையும் கெடுத்து விடுகிறார்கள். கொஞ்சம் மழையில் நனையும் முன்னே தலையை தோட்டி விட்டால் பின் அந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி எப்படி கிடைக்கும்? தும்மும் முன்னே டாக்டரிடம் அழைத்து செல்லுவது இப்பொழுது பேஷன் ஆகி விட்டது. ஆக, அக்குழந்தைக்கு  இயற்கையாக இருக்கும் நோயிலிருந்து மீளும் ஆற்றலை சிறு வயதிலேயே அழித்து விடுகிறார்கள். பிறகு அவர்கள் நாளொரு மாத்திரையும் பொழுதொரு மருந்துமாக வளர்கிறார்கள்.

ஒரு சில பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள் என்பது நிஜம். அவர்கள் எதைக் கேட்டாலும் அதை வாங்கி கொடுப்பது. காசின் அருமை தெரியாமல் வளர்ப்பது. அவர்கள் பொருட்களை சேதப் படுத்தினால் கண்டிக்காமல் இருப்பது. அவர்களின் படிக்கும் கடமையை செய்யத் தவறினால் கண்டிக்காமல் இருப்பது. பெரியோர்களை மரியாதை இல்லாமல் பேசினால் கண்டிக்காமல் இருப்பது. கஷ்டமே தெரியாமல் வளர்ப்பது என்று பல தவறுகளை இந்த அன்பான பெற்றோர்கள் செய்கின்றார்கள். 

குழந்தை எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்து அவர்கள் இஷ்டம் போல் வாழ அனுமதிக்கின்றனர் இந்த அன்பான பெற்றோர்கள். உண்மையில் அவர்கள் அந்த குழந்தையின் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டு இருக்கின்றனர் என்பது தானே நிதர்சனமான உண்மை?

நீங்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் உங்கள் குழந்தையை காசின் அருமை தெரியுமாறு தான் வளர்க்க வேண்டும். பொருட்களை வீணாக்கக் கூடாது என்பதை அவர்களின் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும். சொகுசாக மட்டுமே இருக்கக் கூடாது என்றும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் குழந்தைக்கு சிறு வயதிலேயே புரிய வைக்க வேண்டும்.

அதாவது வேலை நேரத்தில் வேலை. மற்ற நேரத்தில் சந்தோஷமாக ஜாலியாக  இருத்தல் என்று வாழ்க்கையை அவர்கள் சிறு வயதிலேயே புரிந்து கொண்டால் வாழ்க்கை அவர்களுக்கு எளிதில் வசப் படும். பிற் காலத்தில் அவர்கள் சிறந்த குடிமகன்களாக இந்நாட்டில் சந்தோஷமாக வாழ்வார்கள். அப்படி வளர்த்த பெற்றோர்களும் பிற் காலத்தில் நிம்மதியாக இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை பாசத்தோடும், அக்கறையோடும் வளர்ப்பது தப்பில்லை. ஆனால் அதே சமயம் அவர்களை சோம்பேறிகளாகவும் ,மனத்தைக் கட்டுப் படுத்த முடியாதவர்களாகவும், பெரியோர்களை மதிக்காதவர்களாகவும், கோழைகளாகவும், நேர்மையற்றவர்களாகவும், பிடிவாதக்காரர்களாகவும், பொறுப்பில்லாதவர்களாகவும் வளர்த்தீர்கள் என்றால் அது உங்கள் செல்லக் குழந்தையின் வாழ்க்கையை பாழடித்து விடும் என்பதை தயவு செய்து மறந்து விடாதீர்கள். எந்த குழந்தைக்கும் மனக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

வாழ்க வளமுடன்!

உங்கள் மனதின் அற்புத சக்திகள் 

நிராகரிப்பை நிராகரியுங்கள் 




Post a Comment

 
Top