அன்பு தான் இந்த உலகை சுழலவைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. அன்பு இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது.  அன்புக்காக அதிகம் ஏங்கும் உயிரினம் மனிதன் என்று சொல்லலாம். அன்பே சிவம். ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு அன்பு காட்டும் போது அவர்கள் உங்களை கறிவேப்பில்லை போல் பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள் என்பது நிஜம். அன்பாக இருந்தால் உங்களை அடிமையாக்கி விடுவார்களா? மேலே படியுங்கள்.....


நம் சமூகத்தில் உள்ள மிகப் பெரிய குறைபாடு என்னவென்றால்,
குனிந்தவனை குனிய குனிய குத்துபவர்கள் தான் இங்கு அதிகம் இருக்கிறார்கள் என்பது தான். ஒருவருக்கு நீங்கள் அன்புடன் உதவி செய்ய ஆரம்பித்தால் அந்த உதவி முடிவில்லாமல் தொடரும் நிலை தான் ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் ஒரு கட்டத்தில் அது உங்கள் கடமையாகிக் போய் விடும் அபாயமும் உண்டு.

ஒருவர் மென்மையாக இருந்தால் அவர் கோழை என்று இந்த சமூகம் முத்திரைக் குத்தி விடுகிறது. அலுவலகத்தில் நன்றாக வேலை செய்பவரிடம் தான் மேலும் அதிக உழைப்பை எதிர்பார்க்கிறார்கள். மனைவிக்கு உதவி செய்ய போய் கொத்தடிமையாய்  மாறி போனவர்கள் இவ்வுலகில் ஏராளம், ஏராளம். கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தை பிடிப்பவர்கள் தான் இங்கு ஏராளமாக உள்ளார்கள்.

ஒரு சிலர் தான் அன்பானவர்களின் அன்பை தவறாக பயன்படுத்துவதில்லை. என் தந்தை என்னுடன் பல வருடங்கள் வாழ்ந்த பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவர் மிகவும் அன்பானவர். எங்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதில் அவர் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்வார். உண்மையில் அவருக்கு எங்களை தொந்தரவு செய்ய எல்லா உரிமையும் இருந்தும் அவர் அதை என்றும் பயன் படுத்தியதில்லை. அதே சமயம் நானும் அவரை என்றுமே தவறாக உபயோகப்படுத்தியதில்லை என்று சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்ளுகிறேன். அவரை கிள்ளுக் கீரையாய் நினைத்ததே இல்லை. அவரை கடைசி வரை அன்புடனும் மரியாதையுடனும் தான் பார்த்துக் கொண்டேன்.

அன்பாக இருப்பவர்கள் கோழைகள் அல்லர். ஏமாளிகளும் அல்லர். கோமாளிகளும் அல்லர். அவர்களை நீங்கள் தவறாக பயன் படுத்தினால் ஒரு நாள் அதன் பலனை நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும். அன்பானவர்களை மதியுங்கள். அவர்களை மிதிக்காதீர்கள்.

வாழ்க வளமுடன் 

Post a Comment

 
Top