நாம் வாழ்வில் பல பருவங்களைக் கடந்து செல்கிறோம்.  குழந்தைப் பருவம்,  டீன் ஏஜ் பருவம், வாலிபப்  பருவம், நடுத்தர வயது, முதுமைப் பருவம்  என்று பல பருவங்களைக் கடந்து வாழ்கிறோம். இவற்றில் எந்த பருவம் உங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது? எந்த பகுதி சந்தோஷத்தைத் தருகிறது? எந்த பகுதி நிம்மதியைத் தருகிறது? உங்கள் வாழ்வின் முக்கிய பகுதி எது? மேலே படியுங்கள்.


நாம் விரும்பியோ அல்லது  விரும்பாமலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ எப்படியோ இந்த உலகில் பிறந்து விட்டோம். முதல் இரண்டு வருடங்கள் தாயின் அரவணைப்பில் சந்தோஷமாக செல்லுகிறது. தாய் மட்டுமல்ல, எல்லோரும் அப்பருவத்தில் குழந்தைகளை சீராட்டுவார்கள். கொஞ்சம் சிணுங்கினால் போதும் எல்லாம் கிடைத்து விடும் பருவம் அது.

பின் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தபின் சற்று பொறுப்புகள் வந்து சேருகின்றன. அதுவும் இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு அதிக கடமைகளைப் பெற்றோர்களே சுமத்தி விடுகிறார்கள். நிறைவேறாத தங்களின் கனவுகளை எல்லாம் தங்கள் குழந்தைகள் மூலம் நிறைவேற்றத் துடிக்கிறார்கள். பாட்டுக் கிளாஸ், டென்னிஸ், கீ  போர்டு, டான்ஸ் கிளாஸ், கிரிக்கெட் என்று பிள்ளைகளைப் படுத்தி எடுக்கிறார்கள் என்பது நிஜம்.

டீன் ஏஜ்ஜில் அதிக எனெர்ஜி மற்றும் உற்சாகம் இருக்கும். எதிர்பாலின கவர்ச்சி எட்டிப் பார்க்கும் பருவம் இது. சரியான படிப்பைத் தேர்வு செய்ய வேண்டிய முக்கிய நேரமும் இது தான். பிறகு கல்லூரி படிப்பு, நம் தொழிலை நிர்ணயம் பண்ணக் கூடியதாக இருக்கிறது. அதனால் சரியான கல்லூரி படிப்பை நாம் தேர்வு செய்ய வேண்டியது மிக முக்கியம் ஆகும்.

காதல் இளமைப் பருவத்தின் பெருமை ஆகும். வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தோசம் காதல், கல்யாணம், இல்லறம் என்பவை தான். திருமணமாகி நாம் வாழும் முதல் சில ஆண்டுகளை நாம் நம் வாழ்வின் பொற்காலம் என்று உறுதியாக சொல்லலாம்.

பிறகு மோகம் சற்று தணிந்த பின் சொத்துக்கள் சேர்க்கப் படாதபாடு படுகிறார்கள். அதற்குள் குழந்தைகளும் வந்து விடுகின்றன. பிறகு அவர்கள் படிப்பு, பாட்டுக் கிளாஸ், டென்னிஸ், கீ  போர்டு, கிரிக்கெட், டான்ஸ் கிளாஸ் என்று வாழ்வு பரபரப்பாகி விடுகிறது. பின் அவர்களுக்கு சரியான வேலை மற்றும் கல்யாணம் ஆகும் வரை பொறுப்புகள் இருந்துக் கொண்டே இருக்கின்றன.

பிறகு நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம் என்றால் பேரப் பிள்ளைகள் வந்து உங்கள் வாழ்வுக்குப் புது அர்த்தங்களைக் கொடுக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. ஆக வாழ்வுக்கும், நம் ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் பொறுப்புகளுக்கும் முடிவு என்பது ஏற்படுவதே இல்லை என்பது தான் நிஜம்.

எது எப்படி இருந்தாலும், வாழ்வின் பொற்காலம் திருமணமான புதிது தான் என்றே நான் நினைக்கின்றேன்.

வாழ்க வளமுடன்!

உங்களுக்கு விதிக்கப் பட்ட உறவுகள் 

இறக்கத்தானே பிறந்திருக்கிறோம்?



Post a Comment

 
Top