பொதுவாக கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நம்பத்தான் செய்கின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணை தங்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள் என்றே நம்புகின்றனர். ஆனால், கற்பு நெறி தவறுவது என்பது நடந்துக் கொண்டு தானிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. மனிதன் காட்டை விட்டு வந்த ஒரு நாகரீகமான மிருகம். ஆனால் அவனுள் அந்த மிருக இச்சை இன்னும் மிச்சம் இருக்கத் தான் செய்கிறது. சில சந்தர்ப்பங்களில் கணவன் அல்லது மனைவி சலனப் பட்டு கற்பை இழந்து விடுகிறார்கள் என்பது நிஜம். வாழ்க்கைத் துணை மீது நாம் நிச்சயம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால் அதே சமயம் ஒரேயடியாக சுதந்திரமாக விட்டு விட்டால் அவர்கள் கற்பு நெறி தவறி விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணை மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம்? மேலே படியுங்கள்....
எந்த நெருங்கிய உறவும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே இருக்கிறது என்பது உண்மை தான். கணவன் மனைவி மீதும் மனைவி கணவன் மீதும் நம்பிக்கை வைத்தே ஆக வேண்டும். அது தான் அவர்கள் உறவைப் பலப்படுத்தும். ஆனால் அதே சமயம் அவர்களுக்கு எந்த அளவுக்கு எதிர் பாலினரிடம் பழகுவுதற்கு சுதந்திரம் கொடுக்கலாம் என்பது தான் நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம். ரொம்பவும் கட்டுப்பாடு விதித்தால் அது நம்பிக்கை இல்லாததைக் குறிக்கும். அதே சமயம் அளவுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுத்தால் அதை அவர்கள் தவறாக பயன் படுத்துவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
அதாவது அதிக கட்டுப்பாடும் கூடாது. அதீத சுதந்திரமும் தவறு தான். மிதமான சுதந்திரம் தான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஒரு பட்டாம்பூச்சியை நீங்கள் கையில் பிடித்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அதை லேசாக பிடித்தால் அது பறந்து விடும். அதிகமாக அழுத்திப் பிடித்தால் அது செத்து விடும். மிதமான அழுத்தத்துடன் அதைப் பிடித்தால் அது நம்மிடமே இருக்கும். அது போல் தான் நாம் நமது வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கும் சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
நம்பிக்கை கட்டாயம் வேண்டும். ஆனால் அதுவே மூட நம்பிக்கையாய் இருந்தால் அது உங்கள் வாழ்க்கையை பாதிக்கக் கூடும். உங்கள் துணையிடம் நம்பிக்கை வையுங்கள். அது வெறும் மூட நம்பிக்கையாய் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்!
Post a Comment