மனிதன் சிந்திக்க ஆரம்பித்த நாள் முதல் இந்த கேள்வியும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றே நான் நினைக்கின்றேன். கடவுள் இருப்பதாக நம்பும் ஆத்திகர்களும், இல்லை என்று மறுக்கும் நாத்திகவாதிகளும் காலம் காலமாய் இந்த உலகில் விவாதம் பண்ணிக்கொண்டுதானிருக்கிறார்கள்.
ஒரு நிச்சயமான பதில் இருவருக்குமே இன்னும் கிடைக்கவில்லை என்பதும் கடவுள் நமக்கு இன்னும் புதிர் தான் என்பதும்  நிஜம். என்ன தான் நாம்  அறிவியல் தொழில் நுட்பத்தின் உச்சியில் இன்று இருந்தாலும்  கடவுள் இன்னும் புதிராக இருப்பது பெரிய அதிசயம் தான்.



எத்தனையோ அதிசய கண்டுபிடிப்புகள், எத்தனையோ விஞ்ஞான சாகசங்கள், விண்வெளி ஆராய்ச்சிகள் செய்தாலும், நம்மால் கடவுள் பற்றி இன்னும் தெளிவாக அறிய முடிய வில்லை என்பது நிஜம்.

ஒரு வேளை கடவுள் இல்லையோ, நாம் தான் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோமோ என்ற அவ நம்பிக்கை ஆத்திகர்களுக்கு சில சமயங்களில் வருகிறது என்பது சத்தியம். அதே போல், கடவுள் ஒரு வேளை  இருக்கின்றாரோ , நாம் அவரைப் பழிப்பதால் நமக்கு ஏதாவது தீங்கு நேருமோ என்று  கடவுள் நம்பிக்கையுடன்  சில சமயம் நாத்திகர்கள் வாழ்கிறார்கள் என்பதும் உண்மை தான்.

ஒரு படைப்பு என்று ஒன்று இருந்தால் படைப்பாளி என்று ஒருவர் நிச்சயம் இருந்தே தீர வேண்டும். இன்று நீங்களும் நானும் இவ்வுலகில் இருப்பதற்கு இரண்டு பேர் தான் காரணம் என்பது தெரிந்த உண்மை. இந்த வலைப் பதிவை படைத்தது நான். எனது லாப்டாப்பை உருவாக்கியவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. நிச்சயம் நிறைய பேர் இது உருவாகக் காரணமாக இருந்திருப்பார்கள். இவ்வளவு அற்புதமாக இயங்கும் இந்த பிரபஞ்சத்தையும் ஒருவர் படைத்திருக்க வேண்டும் அல்லவா?

எதிலும் நிரூபணத்தை கேட்கும் விஞ்ஞானிகளும் கடவுளைக் கும்பிட்டு விட்டுத் தான் ஆய்வுக் கூடத்திற்குள் செல்லுகிறார்கள். சில விஷயங்கள் நம் அற்ப அறிவிற்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. எத்ததனை நட்சத்திரங்கள்,எத்தனை கோள்கள் இந்த பிரபஞ்சத்தில் இம்மி பிசகாமல் இயங்கி வருகின்றன. குழந்தை  பிறப்பு எப்பேர்பட்ட அதிசயம்?

இயற்கை எத்தனை அற்புதங்களை செய்துக்கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு படைப்பும் அதிசயம் தான். ஆண் பெண் என்று ஒரு கவர்ச்சியான வேற்றுமையை அத்தனை உயிரினங்களிலும் வைத்து உயிர் வாழும் ஆசையை ஏற்படுத்தியது யார்?

இறைத்தன்மை என்பது சூட்சமங்கள் அடங்கியது. விஞ்ஞான கருவிகளை வைத்து இதற்கு விடை காண முடியாது. அதனால் தான் நமது பண்டைய இந்திய முனிவர்கள் தங்கள் ஞான திருஷ்டியால் கடவுளோடு தொடர்பு கொண்டார்கள். நாம் கடவுளுடன் தொடர்பு கொள்ளும் அனுபவம் தான்  பேரின்பம் என்கின்ற உண்மையை உணர்ந்து இவ்வுலகிற்கு சொன்ன மகான்கள் அவர்கள். தவ வலிமையில் மட்டுமே நாம் இறைவனை உணர முடியும். சிவனை அல்லது விஷ்ணுவைத் தான் நீங்கள் கும்பிட வேண்டும் என்பதில்லை. அல்லாவையோ அல்லது யேசுவையோ நீங்கள் மனதை ஒருமுகப்படுத்தி கும்பிடும் போது ஒரு நாள் நீங்கள் கடவுள் இருக்கிறாரா என்கின்ற நித்தியக் கேள்விக்கு விடை நிச்சயம் கண்டு பிடிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இன்னும் சொல்லப் போனால் எந்த கடவுளையும் நீங்கள் நினைக்காமல் மனதை ஒருமைப் படுத்தி ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்தாலே இறைத்தன்மை உங்களுக்குப் புலப்படும் என்றே நம்புகிறேன்.

தியானம் செய்யுங்கள். உங்களால் ஒரு வேளை  கடவுளை பார்க்க முடியாமல் போகலாம். ஆனால் நிச்சயம் அவர் இருப்பதை உணர முடியும். பேரின்பம் நம்மால் அடைய முடியாமல் போகலாம். அத்தகைய தவ வலிமை இன்று  பெறுவது கடினம். ஆனாலும் முறையாக தியானம் செய்தால் நாம் கடவுளை உணரவும், சில பல நற் பலன்களை அடையவும் முடியும் என்பது சர்வ நிச்சயம்.

கடவுள் இருக்கிறார் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கை. இல்லை என்பது நாத்திகர்களின் நம்பிக்கை.

வாழ்க வளமுடன்!

    ஆன்மிகத் தேடல்கள் 

             மரண பயம் 

Post a Comment

  1. விஞ்ஞானம் என்பது கடவுலின் படைப்புக்களை ஆராய்வதும் பன்படுத்துவதுமான முயற்சி இல்லையா. கடவுள் இல்லை என்று ஒரு விஞ்ஞனியும் சொன்னதில்லை.

    ReplyDelete

 
Top