1) உங்கள் வீட்டில் எலுமிச்சை மரம் இருக்கிறதா? ஒரு பாத்திரத்தில் சில எலுமிச்சை இலைகளை போட்டு கொதிக்க விடவும். யூகலிப்டஸ் சொட்டுகள் அதில் சேர்த்து ஆவி பிடிக்கவும். ‍தொண்டை எரிச்சலுக்கும் தலை வலிக்கும் இது தகுந்த நிவாரணம் அளிக்கும்.



2)‍ விரலி மஞ்சள் கிழங்கை சுட்டு விட்டு அதன் புகையை சுவாசிக்கவும். மூக்கடைப்பு விரைவில் குணமாகும். அல்லது மஞ்சள் பொடியில் நீர் கலந்து சூடாக்கி அதன் ஆவியை உறிஞ்சவும்.

3) சிறிது ஓமத்தை வாணலியில் வறுத்து ஒரு சிறு துணியில் பொட்டலமாக சுற்றிக் கொள்ளவும். அதை மெதுவாக உரிஞ்சினால் வியக்கத்தக்க வகையில் மூக்கடைப்பிலிருந்து விடுதலை கிடைக்கும்.

4) வெங்காய சாற்றை தேன் கலந்து குடித்தால் சளி இளகும்.

5) துளசி இலை, சுக்கு, லவங்கம் மூன்றையும் அரைத்து நெற்றியில் பற்றாக போடலாம்.

6) வறட்டு இருமலுக்கு படிக்காரத்தை வறுத்து போடி செய்யவும். அதில் பனங்கற்கண்டு கலந்து பாலுடன் சாப்பிடுவது உசிதம். சளியுடன் கூடிய இருமலுக்கு பாலுக்கு பதிலாக வெந்நீர் உபயோகிக்கவும்.

7) நான் அதிகமாக உபயோகிப்பது கஷாயம் தான். நாட்டு மருந்து கடையிலிருந்து அதிமதுரம், சித்தரத்தை, ஆடாதோடை, சுக்கு, திப்பிலி, தூதுவளை, மிளகு, ஓமம், முசுமுசுக்கை இலை இவை எல்லாம் வாங்கி வைத்து இருப்பேன். இதில் ஒன்று இரண்டு குறைந்திருந்தால் பரவாயில்லை. இவை எல்லாம் வசதியாக பொடியாகவும் கிடைக்கும். எல்லாவற்றையும் சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டு துளசி இலைகளையும் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிடவும். கைவசம் வெற்றிலை இருந்தால் அதுவும் சேர்த்து கொள்ளலாம்.

இன்னும் பல எளிய மருந்துகள் உள்ளன. நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சிலவற்றை குறிப்பிடுகிறேன். ஐஸ் மற்றும் குளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது. உப்பு கலந்த வெதுவெதுப்பான நீர் தொண்டையில் படுமாறு அடிக்கடி கொப்பளிக்கவும். மிளகு சேர்த்த சூப் சாப்பிடவும். எண்ணையில் பொரித்த பதார்த்தங்களை தவிர்க்கவும்.





Post a Comment

 
Top