மனித வாழ்க்கையின் சுவாரசியமே அடுத்து நம் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாதது தான். நன்றாக வாழ்பவர்கள் நொடித்துப் போகலாம். அல்லது கஷ்டபடுபவர்கள் மேன்மை அடையலாம். 30 வருடங்களுக்கு மேல்  ஓஹோவென்று வாழ்பவர்களும் இல்லை, 30  வருடங்களுக்கு மேல் கஷ்டப்படுபவர்களும் இல்லை என்கிறது ஜோதிட சாஸ்திரம். மனிதன் தன வருங்காலத்தை அறிய விரும்புகிறான். மிருகங்கள் அடுத்த வேளை  உணவைப் பற்றிக் கூட அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. மனிதன் வருங்காலத்தைப் பற்றை கவலைக் கொள்கிறான். அது எப்படி இருக்கும் என்று அறிய விரும்பதில் வியப்பில்லை அல்லவா?


மனிதன் தன வருங்காலத்தை அறிய ஜோதிடர்களின் உதவியை நாடுகிறான். ஜோதிடர்களாலோ அல்லது வேறு குறி சொல்பவர்களாலோ ஒருவரின் வருங்காலத்தை சரியாக சொல்ல முடியுமா?

இந்திய ஜோதிடம் நிச்சயம் மகத்தானது என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை. ஆனால் இன்று அதில் நல்ல புலமைப் பெற்ற மகத்தான ஜோதிடர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் இன்று ஜோதிடர்கள சொல்லும் ஜோதிடக் கணிப்புகள் தவறாகிப் போகின்றன. அதாவது ஜோதிடம் என்றுமே பொய்ப்பதில்லை. ஜோதிடர்கள் பொய்க்கிறார்கள் என்பது தான் நிஜம்.

ஒரு சிலர் இயற்கையாகவே வருங்காலத்தை சொல்லும் உள்ளறிவு திறன்  பெற்று இருக்கிறார்கள். அவர்கள் ஜாதகத்தைப் பார்ப்பதில்லை. கண்ணை மூடினால் அவர்களுக்கு உங்கள் வருங்காலம் திரையில் திரைப்படம் தெரிவது போல் தெரியும். ஒரு சில சாதாரண மக்கள் இந்த சக்தியைப் பெற்றிருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியம். அவர்கள் ஓரளவு சரியாக வருங்காலத்தைக் கணித்து சொல்கிறார்கள் என்பது நிஜம்.

ஒரு சிலர் கை ரேகையைப் பார்த்து ஓரளவுக்கு வருங்காலத்தைக்  கணிக்கின்றனர். ஒரு சிலர் உங்கள் புகைப் படத்தைப் பார்த்தே பலன் சொல்லி விடுகின்றனர். நாடி ஜோதிடம் பெரும்பாலும் உங்கள் கடந்த காலத்தை சரியாகவே சொல்லி விடுகிறது. ஒரு சிலர் வெகு தூரத்தில் உள்ளவரின் பலன்களைக் கூட இங்கிருந்தே ஓரளவுக்கு சரியாக சொல்லி விடுகின்றனர். 

ஒரு சிலர் வெற்றிலை எண்ணிக்கையை வைத்து அல்லது சோழியை  உருட்டி உங்கள் வருங்காலத்தை சொல்லுகின்றனர். பிரசன்ன ஜோதிடம் மூலமும் வருங்காலத்தைக் கணிக்க முடியும் என்பது உண்மை தான். 'டாரெட் கார்டு'  மூலமும் ஓரளவுக்கு உங்கள் வருங்காலத்தைக் கணிக்கலாம்.

ஜோதிடம் போன்றவை எல்லாம் ஏமாத்து வேலை என்று ஒரே அடியாக சொல்லி விட முடியாது. நிறைய ஜோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள என்பது வேறு. ஆனால் ஜோதிடம் பொய் என்று கூறுவது தவறு. அதை சரியான முறையில் ஆராய்ச்சி செய்தால் ஜோதிடம் ஒரு விஞ்ஞானமாக மாறி விடும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், யாராலும் நம் வருங்காலத்தை முற்றிலும் சரியாக கணித்து விட முடியாது. உங்கள் ஆயுளையோ அல்லது மற்ற விஷயங்களையோ யாராலும் முற்றிலும் சரியாக சொல்லி விட முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதே சமயம் இவை எல்லாம் பொய் என்றும் சொல்லி விடக் கூடாது. 

ஜோதிடத்தை எப்படி பயன் படுத்த வேண்டும்? ஒரு ஜோதிடர் நீங்கள் கோடீஸ்வரர் ஆகி விடுவீர்கள் என்று சொன்னார் என்பதற்காக நீங்கள் ஒன்றும் செய்யாமல் வீட்டில் உட்காரக் கூடாது. அதே போல் உங்கள் ஆயுள் குறைவு என்று சொன்னால் அதை அப்படியே நம்பி விட்டு இடிந்து போய் உட்காரக் கூடாது. பின் எதற்காக ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு இப்பொழுது நேரம் நன்றாக  இருந்தால் வியாபாரத்திலோ அல்லது மற்ற விஷயங்களிலோ சில  துணிச்சலான முடிவுகளை எடுக்கலாம். நேரம் சரியாக இல்லை என்றால் கொஞ்சம் எல்லா விஷயங்களிலும் அடக்கி வாசிக்கலாம்.

ஜோதிடம் போன்றவைகளை நாம் ஊறுகாயாகத்  தொட்டுக் கொள்ளலாம். அதையே உணவாக உண்ணக் கூடாது. அதை ஒரு வழிகாட்டியாக பயன் படுத்தினால் நல்லது. 

வாழ்க வளமுடன்!


 


Post a Comment

 
Top