மரண பயம் இல்லாதவர்கள்  இவ்வுலகில் இருப்பார்களா என்பது சந்தேகமே. நாம் ஏன் மரணத்தைக் கண்டு இப்படி அஞ்சி நடுங்குகிறோம்? இத்தனைக்கும் பிறந்தவர்கள் எல்லாம் ஒரு நாள் மறிப்பார்கள் என்பது நமக்கு நன்றாகத்  தெரியும். எத்தனையோ கோடானு கோடி மக்கள் நமக்கு முன் இவ்வுலகில்  மரணித்திருக்கிறார்கள். இருந்தாலும் நாம் ஏன் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறோம்? மேலே படியுங்கள்.....


மரணத்திற்கு பின் என்ன நடக்கும்? அது நமக்குத் தெளிவாகத் தெரியாததால் தான் நமக்கு மரணத்தைக் கண்டு பயம் வருகிறது. ஒரு விஷயம் நமக்கு சரியாகத் தெரியாத போது பயம் ஏற்படும் என்பது நியதி. நாம் இறந்த பின் நமது உடல் எந்த வலியையும் அனுபவிக்காது என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும்  அதற்கு மேல் என்னாகும் என்ற பயம் வருவதற்கு காரணம் என்ன? நாம் என்பது நமது உடல் மட்டும் அல்ல என்பது நம் ஆழ் மனதுக்குத் தெரிந்திருக்கிறது. நமது ஆன்மாவிற்கு இறப்பில்லை  என்பது நமக்குத் தெரிந்திருப்பதால், அதற்கு என்ன ஆகும் என்ற பயம் வருகிறது. அதனால்   நாம் மரணத்திற்கு அஞ்சுகிறோம்.

மேலும் நாம் நம் குடும்பத்தினர் மற்றும் நமது சொத்துக்கள் மீது அதிக பற்றுக் கொண்டுள்ளோம். அவைகளை விட்டுச் செல்ல நாம் விரும்புவதில்லை. சிலர் தமது குடும்பத்தினர் தாம் இல்லாவிட்டால் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்று நினைக்கின்றனர். இதுவும் ஒரு மாயை தான். உண்மை என்னவென்றால் எல்லோரும் நாம் இல்லையென்றாலும் இவ்வுலகில் வாழ்ந்து விடுவார்கள். இவ்வுலகையே வென்ற மாவீரன் அலெக்ஸாண்டர் தாம் இறந்த பின் தனது கை சவப்பெட்டிக்கு வெளியே தெரியும்படி வைத்து தனது இறுதி ஊர்வலத்தை நடத்த வேண்டினான். ஏன் தெரியுமா? உலகையே வென்ற அலெக்ஸாண்டர் கூட தன்னால் ஒரு சல்லிக் காசை இறந்தபின் எடுத்து செல்ல முடியாது என்பதை இந்த உலகம் உணர வேண்டும் என்பதற்காகத் தான்  அப்படி செய்தான்.

மரண பயத்தை நீக்குவது எப்படி? மரணம் என்பது முடிவு அல்ல. அது ஆன்மாவின் ஒரு போக்கு. நமது ஆன்மா அழிவற்றது. இறப்பற்றது. அதனால் நாம் இறப்பற்றவர்கள் என்று சொல்லலாம். பின் ஏன் நாம் மரணத்திற்கு அஞ்ச வேண்டும்? நமது சட்டை கிழிந்து விட்டால் நாம் வேறு சட்டை அணிவோம். அது போல் தான் ஆன்மாவும் உடல் கெட்டு விட்டால் வேறு உடலை சென்று   அடைகிறது. புதிய சட்டை போடுவதற்கு சந்தோஷப்படுவோம் அல்லவா? புதிய உடல் எடுக்க மட்டும் ஏன் கவலைப் பட வேண்டும்?

பிறந்தஅந்த நிமிடமே நமது சாவு மட்டுமே உறுதியானது. மரணம் தவிர்க்கவே முடியாதது. அதைக் கண்டு அஞ்சுவது பயனற்றது அல்லவா? உண்மையில் மரணிக்கும் போது  அதீதமான அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும் என்கிறார்கள் ஞானிகள். உண்மையில் நாம் மரணமற்றவர்கள். இந்த உடல் மட்டும் அழிவதற்குப்  பயப்படவேண்டியதில்லை. 

யோகாவும் தியானமும் தினசரி செய்யுங்கள். உங்கள் மனம் உறுதியாகும். உங்கள் மனம் அமைதியாகும். மரண பயத்தை ஓரளவு தியானம் மூலம் வெல்லலாம் என்பது நிஜம்.

வாழ்க வளமுடன்!

           ஆன்மிகத் தேடல்கள் 

அற்புதமான பிரபஞ்ச சக்தி 


Post a Comment

 
Top