நகைச்சுவை என்பது நமது வாழ்க்கைக்கு மிகவும் தேவையான விஷயம் ஆகும். இவ்வுலகில் உள்ள ஜீவ ராசிகளில் சிரிக்கத்தெரிந்த ஒரே உயிரினம் மனித இனம் மட்டும் தான். ஆனால் அந்த பெருமையை நம்மில் பலர் இழந்து நிற்பது வேதனைக்குரிய விஷயம் என்றே சொல்ல வேண்டும். சிரிக்க முடியாதவன் பரிதாபத்திற்குரியவனே ஆவான். சிலர் சிரித்தால்  கௌரவம் குறைந்து விடும் என்று நினைத்து 'உம்' என்று முகத்தை உம்மணாம் மூஞ்சி போல் வைத்து இருப்பார்கள்.



சிரிப்பது ஓன்றும் கௌரவம் குறைக்கும் செயல் அல்ல. சிரிப்பது தான் மனித இயல்பு. சிரிப்பினால் மனிதனுக்கு பல நன்மைகள் உண்டாகின்றன. அவனது உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க சிரிப்பு மிகவும் உதவுகிறது என்பது நிஜம். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது அக்மார்க் உண்மை.

உங்களுக்கு நகைச்சுவையாக பேச வரவில்லைஎன்றாலும் பரவாயில்லை. நல்ல நகைச்சுவையை இரசிக்கும் பக்குவமாவது  உங்களுக்கு இருந்தால் அதுவே உங்களுக்கு உயர்வைக் கொடுக்கும். சிலர் வாயைத்திறந்தாலே ஜோக்குகள் சரமாரியாக வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களை எல்லோரும் விரும்புவார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ? எனது இளமைக் காலங்களில் என்னைச்  சுற்றி ஒரு பட்டாளமே எப்பொழுதும் இருந்ததற்கு காரணம் நான் அவர்களை சிரிக்க வைத்ததுதான்.

இப்பொழுதெல்லாம் மக்கள் நகைச்சுவையின் மகிமையை உணர ஆரம்பித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். 'மணமக்கள் தேவை' விளம்பரங்களில், நன்றாக படித்த, நல்ல வேலையில் உள்ள நகைச்சுவை உணர்வு மிக்க  மணமகன்/மணமகள்  தேவை என்று கொடுப்பதை நிறைய பார்க்கிறோம்.

நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் மென்மையானவர்கள். மனித நேயம் மிக்கவர்கள் என்பதில் ஐயமில்லை. குழந்தைகள் இயல்பாகவே சிரிப்பார்கள். ஒரு நாளைக்கு குழந்தை சுமார் 200 முறை சிரிக்கின்றது. ஆனால் அதே குழந்தை வளர்ந்த பின் 25 முறை சிரிப்பதே கஷ்டமாகிவிடுகிறது.  

தினமும் வாய் விட்டு சிரியுங்கள். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுடன் நேரத்தை செலவழியுங்கள். தொலைக்காட்சியில் 'காமெடி' நிகழ்ச்சிகளை விரும்பி பாருங்கள். ஜோக்குகளை விரும்பி படியுங்கள்.

ஒரு முறை ஒரு பாடகர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக   வெளியூர் சென்றார். போன இடத்தில் அவருக்கு தொண்டைக்கட்டி விட்டது. மறு நாள் கச்சேரியில் அவர் பாட வேண்டும். வேறு வழி இல்லாமல் அந்த இரவில் அலைந்து திரிந்து கடைசியாக  ஒரு இ.என்.டி டாக்டர் வீட்டைக் கண்டு பிடித்தார். காலிங் பெல்லை அடித்தார். டாக்டரின் மனைவி கதவைத் திறந்தார். தொண்டைக் கட்டி இருந்ததால், கம்மிய குரலில் 'டாக்டர் இருக்காரா?' என்று இரகசியம் பேசுவது போல்  கேட்டார். அந்தம்மா அதை விட மெல்லிய குரலில், 'இல்லை இலை, சீக்கிரம் உள்ள வாங்க' என்றார்.

சிரியுங்கள். சிரியுங்கள். சிரித்துக் கொண்டே இருங்கள். முடிந்தால் மற்றவர்களையும் சிரிக்க வையுங்கள். வாழ்க வளமுடன்!

ஒப்பிடுதல் முன்னேற்றத்திற்கு தேவையா?

முக்கோண வெற்றி சூத்திரம் 











Post a Comment

 
Top