இசைக்கு மயங்காதவர் யார் இருக்கப் போகிறார்கள் இந்த உலகில்? மிருகங்களும்,  ஏன் தாவரங்களும் கூட  இசைக்கு மயங்குகின்றன என்பதே உண்மை. கர்நாடக இசை என்பது 'ஹோட்டல் சரவணா பவன்' போல் உயர் தரமானது எனலாம். அதே  சமயம் சினிமா இசையை நாம் குறைத்து மதிப்பிட  முடியாது என்றே நினைக்கின்றேன். இந்திய சினிமாவில் மிகப் பெரிய இசை  ஜாம்பவான்கள்  இருந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆம், அற்புதமான இந்திய சினிமா இசை நம் எல்லோரின் வாழ்க்கையிலும் இரண்டற கலந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

ஏ.ஆர். ரஹ்மான் :

தமிழ்நாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன், ராம மூர்த்தி, கே.வீ. மகாதேவன் போன்றோர் 70கள் வரை தமிழ் சினிமாவை கோலோச்சிக்  கொண்டிருந்தார்கள்.  'சிங்கார வேலனே தேவா', 'அச்சம் என்பது மடமையடா', 'உள்ளத்தில் நல்ல உள்ளம்', 'காலங்களில் அவள் வசந்தம்',  'நான் மலரோடு தனியாக', 'ஒரு நாள் போதுமா?', போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் தமிழ் திரை உலகை புரட்டி எடுத்து பின் சற்று ஓய்ந்து இருந்த நேரம். அப்பொழுது  ஹிந்தி சினிமாவில் எஸ்.டி. பர்மன், ஆர்.டி. பர்மன், லக்ஷிமிகாந்த் பியாரிலால் ஆகியோர் மிகவும் அற்புதமான இசையை  தந்து கொண்டிருந்தனர். அடியேனையும் சேர்த்து  தமிழ் மக்கள் எல்லோரையும் ஹிந்தி பாட்டுக்கள் கேட்க வைத்தப்  பெருமை அவர்களுக்கு நிச்சயம் உண்டு.

'தம்மாரோ தம்', 'மேரே சப்னோக்கி ரானே கபு', 'ஜானே ஜா டூண்டுதா ஃ பிருரஹா', 'ரூபுத்தேரா மஸ்தானா', 'மேன் ஷாயர் தோ  நஹின்' , ஓ மேரே தில் கே செயின்', மேரே தில் மேன் ஆஜ் கயா ஹை', போன்ற அற்புதமான பாடல்கள் ஹிந்தி துளியும் தெரியாத என் போன்றோரை  பரவசப்படுத்தியது நிஜம்.

பின் இளைய ராஜா என்னும் இசை மேதை 'மச்சானப்  பார்த்தீங்களா' என்று ஆரம்பமே அமர்க்களப்படுத்தி நம்மை மிரள வைத்தார். பிற்காலத்தில் 'சிம்பனி' கொடுத்து 'மேஸ்ட்ரோ' ஆனார். ஆஸ்கார் நாயகன்  ஏ.ஆர். ரஹ்மான் 'சின்ன சின்ன ஆசை' என்று ஆரம்பித்து ஹாலிவுட்டையே கைப்பற்றினார்.

எத்தனை இசை மேதைகள் இந்த இனிய இந்தியாவில்? எத்தனை அற்புதமான பாடல்கள் எத்தனை கோடி மனிதர்களை சந்தோஷப்படுத்தியிருக்கின்றன?
இந்திய இசை மேதைகளுக்கு ஒரு சல்யூட்.  அவர்கள் எல்லோரும் பல்லாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

வாழ்க இசை!

                         ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் 

                     விதி வலியது தானா?




                                                

  
                                                





Post a Comment

 
Top