உரையாடும் திறமையின் முக்கியத்துவத்தை பலர் உணர்வதேயில்லை. அது வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் உங்களுக்கு உதவி செய்யும் என்பதே உண்மை. பேசும் பிள்ளையே பிழைக்கும் என்பார்கள். நன்றாக பேசத்தெரிந்த ஒருவரால் எத்தனையோ விஷயங்களை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதே நிஜம். பேசும் திறமை பயன்படாத இடமே இல்லை என்று அடித்து சொல்லலாம்.


உரையாடும் கலையை வளர்த்துக் கொள்ளுவது எப்படி?

நமது பலமும், நமது பலவீனமும் நமக்குத் தெரிந்து இருக்க வேண்டும். எதைப்  பேச வேண்டும் என்பது நமக்குத் தெரிந்து இருக்க வேண்டும். அதை விட முக்கியமானது எதை பேசக் கூடாது என்பதை தெரிந்திருப்பது தான்.

நாம் முதலில் தெளிவாக சிந்திக்க வேண்டும். அந்த திறமை இல்லை என்றால் முதலில் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிலர் இயல்பாகவே அந்த திறமையைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பாக்கியசாலிகள் என்பதில் சந்தேகமே இல்லை.

நாம் யாரிடம் பேசுகிறோம் என்பதையும் தெரிந்து பேச வேண்டும். ஒரு கூலித் தொழிலாளியிடம் போய் உங்கள் ராக்கெட் விஞ்ஞான அறிவைக் காட்டினால் என்ன பயன்?

எந்த சூழ்நிலையில் பேசுகிறோம் என்று அறிந்து இருக்க வேண்டும். நகைச்சுவையாகப் பேசுவதால் பல நன்மைகள் உண்டு. ஆனால், துக்க வீட்டில் போய்  நகைச்சுவையாக பேசக்கூடாது. ஒருவர் கோபத்தில் இருக்கும் போது உதவி கேட்கக் கூடாது.

ஒருவர் சந்தோஷமாக இருக்கும் போது உதவி கேட்கலாம். ஒருவர் தீவிரமாக ஒரு முக்கியமான விஷயத்தைப்  பேசும் போது ஜோக் அடிப்பதோ அல்லது கவனக் குறைவாக இருப்பதோ கூடாது.

பேசும் போது உற்சாகமாக பேச வேண்டும், சிரித்த முகத்துடன் பேச வேண்டும். உற்சாகத்துடன் பேசும் போது நீங்கள் சிரித்த முகத்துடன் தான் இருப்பீர்கள். மற்றவர்கள் பேசும் போது குறுக்கிடக்கூடாது. அவர்கள் பேசுவதை நன்றாக கவனிக்க வேண்டும். அவர்கள் உணர்வுகளுக்கு மரியாதைக் கொடுக்க வேண்டும்.

மற்றவர்களைக்  காயப்படுத்தும்படி பேசக் கூடாது. ஒரு சிலர் தம்மை விட பலம் குறைந்தவர்களை கேலியாகப் பேசுவார்கள். இங்கு நான் பலம்  என்று குறிப்பிடுவது உடல் பலமாகவோ அல்லது பண பலமாகவோ அல்லது சமூக அந்தஸ்து பலமாகவோ இருக்கலாம்.

நகைச்சுவையாக பேசும் போது கூட மற்றவர் மனம் புண்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்குவாதத்தில் என்றுமே ஈடு பட வேண்டாம். அதனால் எந்த பலனும் இல்லை. வாக்குவாதத்தில் நீங்கள் வெற்றி பெற்றாலும் உங்கள் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ இழந்திருப்பீர்கள்.

குரலை சந்தர்ப்பத்திற்கேற்ப ஏற்றியோ அல்லது இறக்கியோ பேசுங்கள். இனிமையான வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துங்கள். நேர்மறையான (Positive) வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். நேர்மறையான விஷயங்களைப் பேசுங்கள்.

பேசும் திறமையினால் எத்தனையோ பேர் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள்.

உரையாடும் திறமையை குறைத்து மதிப்பிடாதீர்கள்.  

வாழ்க வளமுடன்!

            உங்கள் பணப் பிரச்சினைக்குத் தீர்வு 

                                எதிர் பாராததை எதிர்பாருங்கள் 

Post a Comment

 
Top