நாம் எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெறவே துடிக்கிறோம். அப்படித்தானே நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம்? வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது என்ன? பொதுவாக நாம் நல்ல வேலையில் சேருவதை, புகழ் பெறுவதை, நன்றாக பணம் சம்பாதிப்பதைத் தான் வெற்றியான வாழ்க்கையாக கருதுகிறோம்.
மஹாத்மா காந்திஜி இறக்கும் பொது அவரிடம் இருந்தது சில சில்லறைக் காசுகளே. அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் இல்லையா? கர்ம வீரர் காமராஜர் இறந்த போது அவரது பெட்டியில் இருந்ததும் சில்லறைக் காசுகளே. அவரை வாழ்க்கையில் தோற்றவர் என்று சொல்ல முடியுமா? அன்னை தெரசா, பணம் சம்பாதிப்பதற்குப் பதிலாக மக்களின் மனதை சம்பாதித்து வாழ்க்கையில் வெற்றி பெற வில்லையா?
பொதுவாக, சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மக்கள் பண்பு, சுய நலமற்ற தொண்டு இவைகளுக்கு மிக்க மரியாதைக் கொடுத்தார்கள். ஆனால் இப்பொழுதோ நிலைமை தலைகீழாகி விட்டது. மக்கள் பணம் உள்ளவனை மட்டுமே மதிக்கத் தொடங்கி விட்டார்கள். இது ஒரு ஆபத்தான போக்கு என்றே சொல்ல வேண்டும்.
தவறான வழியில் ஒருவன் பணம் சம்பாதித்தாலும் மக்கள் அவனுக்கு மரியாதை செய்கிறார்கள்.பணம் தான் வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிப்பதாக அவர்கள் நினைக்கின்றனர்.
நல்லவர்கள், அன்பானவர்கள், சுயநலமில்லாமல் பிறருக்காக உழைப்பவர்கள், உண்மையான் ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கு இந்த நாட்டில் மரியாதை இல்லை. பணம் இல்லாதவனைக் கட்டிய மனைவியே வெட்டி விடும் காலமிது.
ஆக, இன்று பணம் தான் வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிப்பதாகத் தோன்றுகிறது. மக்கள் எல்லோரும் தம் பிள்ளைகள் பணக்காரர்களாக வர வேண்டும் என்றே விரும்புகின்றனர். நல்லவர்களாக, பண்பாளர்களாக, மனித நேயம் உள்ளவர்களாக, தன்னலமற்ற சேவை செய்யும் மனிதர்களாக வர வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை.
வருங்கால சமுதாயம் இன்னும் மோசமாகி விடக்கூடும் நாம் நம் பிள்ளைகளை நல்லவர்களாக வளர்க்கத் தவறி விட்டால்.
பணம் வாழ்க்கைக்குத் தேவை தான், மறுக்கவில்லை. ஆனால் பணம் பண்ணுவதே வாழ்க்கை என்று ஆகிப் போனால் மனிதர்களிடம் மனித நேயம் அற்றுப் போகும். சுய நலமும், பேராசையும் தான் மிஞ்சும். எல்லோரிடமும் பணமிருக்கும். ஆனால் எவரிடமும் நிம்மதியிருக்காது.
அன்பே சிவம். அன்பே சுகம். அன்பே நிம்மதி. வாழ்க வளமுடன்!
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.