ஆமாம், நான் சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன். கோபத்தைக் கட்டுப் படுத்தாதீர்கள். எல்லோரும் கோபத்தைக் கட்டுப் படுத்த சொல்லும் போது நான் மட்டும் அதைக் கட்டுப் படுத்த வேண்டாம் என்று சொல்லுவது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். உண்மையில் கோபத்தை நாம் கட்டுப் படுத்துவது தவறு. எந்த ஒன்றையுமே கட்டுப் படுத்தும் போது அது மேலும் தீவிரமடைந்து அதீத பலத்துடன் வெளிப் படும் என்பது நியதி. கோபத்தைக் கட்டுப் படுத்தினால் அது மேலும் தீவிரமடைந்து  பெரிய கோபமாக வெளிப் படும் என்பது நிஜம். அதனால் தான் சொல்லுகிறேன். கோபத்தைக் கட்டுப் படுத்தாதீர்கள். மேலே படியுங்கள்......


எதையுமே அடக்கும்போது தான் ஆக்ரோஷமாகும். 'பந்த்' அன்றைக்குத்தான்  தின்பண்டங்கள் சாப்பிடும் ஆசை அதிகமாக இருக்கும். சாமியார்களுக்கு அதிக காம இச்சை ஏற்படுவதற்கு காரணம் அதை அவர்கள் அடக்க முயலுவது தான். ஆக, கோபத்தை கட்டுப் படுத்துவது சரியாக இருக்காது. அது ஒரு தற்காலிக நிவாரணத்தை மட்டுமே அளிக்க இயலும். கோபப் படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அல்லது கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தால் தான் அவை நிறைவேறாதபோது கோபம் வரும். அதனால் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் மீது கோபம் இருந்தால் அதை உடனுக்குடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். பேசாமல் அதை மனதில் மூடி மூடி வைக்கும் போது தான் அது ஒரு நாள் பெரிதாக வெடிக்கிறது.

கோபம் வந்து விட்டால் முகம் சிவக்கும். நரம்புகள் புடைக்கும். இரத்தம் சூடாகும். நெஞ்சு படபடக்கும். உடல் நடுங்கும். ஆக கோபம் உங்கள் உடல் நலனைப்  பாதிக்கிறது என்பது உங்களுக்கு கண் கூடாகவே தெரிகிறது அல்லவா? அது உங்கள் மன நலனையும் பாதிக்கும் என்பதே உண்மை.

கோபம் வந்தால் கடுமையான வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். உடனே கொஞ்சம் தண்ணீர் அல்லது ஜூஸ் குடியுங்கள். அந்த இடத்தை விட்டு விலகி தூர செல்லுங்கள். கோவிலுக்கு செல்லலாம். அல்லது உங்களுக்குப் பிடித்த பொழுது போக்கு எதுவோ அதில் ஈடு படலாம். பிடித்த பாட்டு கேட்கலாம். தியானம் செய்யலாம். வாக்கிங் போகலாம்.

கோபம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையுமே எளிதாக எடுத்துக் கொள்ள பழகுங்கள். கோபம் வந்து விட்டால் சலனப் படாமல் இருக்க முயலுங்கள். கோபம் உங்களை ஒன்றும் செய்து விட முடியாது.

வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top