பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது சரியா? இதில் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு சிலர் சொத்து சேர்த்து வைத்தால் பிள்ளைகள் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள் என்று சொல்லுவார்கள். அதற்கு பதில் அவர்களை நன்றாக படிக்க வைத்து சம்பாதிக்கும் திறமையை வளர்த்து விட்டால் போதும் என்பார்கள். ஆனால்  பலர் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது தான் சரி என்பார்கள். பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது சரியா? அல்லது தவறா? மேலே படியுங்கள்.....


ஒரு புகழ்மிக்க சீன பழமொழி ஒன்று உண்டு. ஒருவருக்கு ஒரு மீனைக்  கொடுத்தால் அவனுக்கு அன்றைய உணவு கிடைக்கும். அதற்கு பதில் அவனுக்கு மீன்  பிடிக்க கற்றுக் கொடுத்தால் அவனுக்கு தினசரி மீன் கிடைக்கும் என்பதே அந்த பழமொழி. உண்மையான கூற்று தான் என்பதை மறுப்பதற்கு இல்லை. இருந்தாலும் நிலையற்ற இவ்வாழ்க்கையில் நமக்கு சொத்து என்று கொஞ்சம் இருந்தால் அது அவசர காலங்களில் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்பதும் நிஜம் தானே?

என்னைப் பொருத்தமட்டில், குழந்தைகளுக்கு நாம் நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். சம்பாதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் கொஞ்சமாவது சொத்து சேர்த்து வைத்து செல்வது தான் சிறந்த பெற்றோருக்கு அழகு என்று நினைக்கின்றேன்.  

சொத்து மற்றும் சேமிப்பு இல்லாமல் வாழ்வது அமெரிக்கர்களுக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கும். நம் நாட்டில் சமூக பாதுகாப்பு குறைவு. சில நாடுகளில் அரசாங்கமே மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கிறது. அங்கு வேண்டுமென்றால் சொத்து சேர்க்காமல் இருப்பது பொருத்தமாக இருக்கும். நம் நாட்டிற்கு அது பொருந்தாது.

நம் நாட்டில் மருத்துவ செலவுகள், படிப்பு செலவுகள்,  திருமண செலவுகள் என்று தவிர்க்க முடியாத செலவுகள் நம் குழந்தைகளுக்கு எந்த நேரமும் வரலாம். அப்பொழுது சொத்து இருந்தால் அவர்கள் அவற்றை எளிதில் சமாளிப்பார்கள்.

அதே சமயம் பிள்ளைகளிடம் 'நமக்கு சொத்து இருக்கிறது, நீ உட்கார்ந்து சாப்பிடலாம்' என்று சொல்லுவது அவர்களை சோம்பேறிகளாக மாற்றி விடக் கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்களால் முடிந்த வரை உங்கள் குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைத்து செல்லுங்கள். பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது சரி தான் என்றே நான் நினைக்கிறன்.

வாழ்க வளமுடன்!


உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்தக் கொள்ள 20 வழிகள் 

மக்கள் தொகைப் பெருக்கம் இந்தியாவுக்கு வரமா அல்லது சாபமா?

Post a Comment

 
Top