பேஸ்புக் (Facebook) இன்று ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய அங்கமாகி விட்டது என்றால் அது மிகையாகாது. பேஸ்புக் உபயோகிப்பதால் நமக்கு பலவிதமான நன்மைகளும் சில தீமைகளும் ஏற்படுகின்றன. பேஸ்புக் பலரின் வாழ்க்கையை சீரழித்து விட்டது என்று சிலர் கூப்பாடு போடலாம். பேஸ்புக் வரமா? அல்லது சாபமா? மேலே படியுங்கள்....
பேஸ்புக் இன்று பலவிதங்களில் மக்களுக்குப் பயனுள்ளதாகவே இருக்கிறது என்பது நிஜம். நாம் பேஸ்புக் மூலம் உலகம் முழுவதும் எளிதில் ஆயிரக்கணக்கான நண்பர்களைப் பெறுகிறோம். பல நாட்டு மக்களின் கலாச்சராம், வாழ்க்கை முறைப் பற்றி அறிகிறோம். அவர்கள் தங்களுக்கு நடக்கும் சுக துக்க விஷயங்களை பேஸ்புக்கில் பதிவு செய்யும் போது அவர்களின் சுக துக்கங்களை நாமும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் நடக்கும் விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள முடிகிறது. புகைப் படங்களுடன் அவர்கள் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் போது நேரில் சென்ற அனுபவம் கிடைக்கிறது எனலாம்.
வேலை இல்லாதவர்கள் பேஸ்புக் மூலம் வேலை பெற்றிருக்கிறார்கள். பேஸ்புக்கில் நண்பர்களாகி பின், காதலர்களாகி திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் ஏராளம் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் பேஸ்புக்கினால் வேலை இழந்தவர்களும் கொஞ்சம் பேர் இருக்கத்தான் செய்கின்றார்கள். பேஸ்புக்கினால் வாழ்க்கையை இழந்தவர்களும், விவாகரத்துப் பெற்றவர்களும் கொஞ்சம் பேர் இருக்கின்றார்கள் என்பதையும் மறுக்க இயலாது.
பேஸ்புக்கினால் பணம் சம்பாதிப்பவர்களும் இருக்கின்றார்கள். அதில் பணம் சம்பாதிக்கும் வழிகள் பற்றி, அல்லது இணையதளங்கள் பற்றி அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. சிலர் பேஸ்புக்கில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி காசை பறிகொடுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்க இயலாது. பலர் தங்களின் வியாபாரத்தைப் பெருக்க பேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர்
இணையதள எழுத்தாளர்களும், வலைப் பதிவாளர்களும் பேஸ்புக் மூலம் தங்கள் வலைப் பதிவுகளுக்கு வாசகர்களைப் பெறுகின்றனர். சிலர் பேஸ்புக்கை ஒரு பொழுது போக்கு அம்சமாக பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் தங்களின் பொன்னான நேரத்தை வீணாக பேஸ்புக்கில் செலவு செய்கிறார்கள் என்பதும் உண்மையே. சிலர் பேஸ்புக்கில் மணிகணக்கில் கேம்ஸ் விளையாடுகிறார்கள் என்பதும் நிஜம் தானே?
எந்த ஒரு நல்ல விஷயமும் நன்மைகளை மட்டுமே கொடுக்க இயலாது. அது ஒரு சில தீமைகளையும் செய்யத்தான் செய்யும். உதாரணமாக காரில் சென்றால் என்றாவது ஒரு நாள் ஒருவருக்கு விபத்து ஏற்படுகிறது என்பதற்காக நாம் காரைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? அது போல் தான் பேஸ்புக்கும். பேஸ்புக்கினால் பல நன்மைகள் கட்டாயம் விளைகின்றன. சில தீமைகளும் விளைகின்றன என்பதற்காக பேஸ்புக்கை நாம் சாபம் என்று அவசரப்பட்டு சொல்லி விட முடியாது. பேஸ்புக் சாபமில்லை, அது ஒரு வரம் என்பதே உண்மை ஆகும்.
பேஸ்புக்கை பயன்படுத்தும் முறையில் அதன் நன்மைகளும் தீமைகளும் விளைகின்றன. சரியாகப் பயன்படுத்தினால் அது வரம், தவறாக பயன்படுத்தினால் அது சாபம் என்று சொல்லி முடிக்கிறேன்.
வாழ்க வளமுடன்!
Post a Comment