நாம் எதற்காக இவ்வுலகில் பிறந்திருக்கிறோம்? இந்த கேள்வி உங்கள் மனதில் எப்பொழுதாவது தோன்றியுள்ளதா? இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நாம் தோன்றியுள்ளதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா? உங்களில் பலர் பலவிதமான காரணங்களை யோசிக்கக் கூடும்.


உங்களில் பலர், குடும்பத்தின் வாரிசுகளை உருவாக்குவதற்கும்  அவர்களை நல்ல நிலையில் அமர்த்தும் வரை உழைப்பதற்கும் பிறந்திருக்கிறோம் என்று நினைக்கலாம். அதாவது தன சுகத்திற்காகவும் தன் குடும்பத்தாரின் நலத்திற்காக உழைப்பதற்காகவும் நாம் பிறந்திருக்கிறோம் என்று நினைக்கலாம்.

ஒரு சிலர் தான் பிறந்தது இந்த உலக சிற்றின்பங்களை அனுபவிக்கத்தான் என்று நினைக்கலாம். குடித்து விட்டு கும்மாளமிடுவதற்கும் காமகளியாட்டங்களில் திளைப்பதற்கும் பிறந்திருப்பதாக  சிலர் நினைக்கின்றனர். சிலர் தன வாரிசுகளுக்கு பணம் சேமிப்பதற்காகவே ஜென்மம் எடுத்திருப்பதாக நம்புகின்றனர்.

ஒரு சிலர் கடவுளுக்கு ஊளியம் செய்யவே பிறந்திருப்பதாக நினைக்கின்றனர். ஒரு சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்யவே தாங்கள் இந்த உலகில் பிறந்திருப்பதாகக்  கருதுகின்றனர். ஒரு சிலர் மற்ற மதத்தினரை தம் மதத்திற்கு மாற்றவே தாம் அவதரித்திருப்பதாகக்  கற்பனை செய்கின்றனர். இன்னும் சிலர் கடவுளுக்காக தம் உயிரைத்  தியாகம் செய்ய இவ்வுலகிற்கு வந்ததாக நினைக்கின்றனர்.

மேலும் ஒரு சிலர் சொர்க்கத்திற்கு போகும் முயற்சிகளை நாம் இப்பூவுலகில் செய்யவே பிறந்திருப்பதாக நினைக்கின்றனர். பொதுவாக எல்லோரும் சாப்பிடுவதற்காகவும், இனப்பெருக்கம் செய்வதற்காகவும் பிறந்திருப்பதாகவே நினைக்கின்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சந்தோஷமாக வாழவே பிறந்திருக்கிறோம் என்றே எல்லோரும் சொல்லுவார்கள்.

ஒரு சிலர் நாம் போன ஜென்மங்களில் செய்த பாவ புண்ணியங்களின் பலன்களை அனுபவிக்கவே இந்த பிறவி எடுத்திருக்கிறோம் என்று சொல்கின்றனர்.

இறை சக்தி என்பது உன்னதமானது. நாம் முதலில் நம்மை உணர வேண்டும் (Self realization) தன்னை உணரும்போது தன்னுள் இருக்கும் அந்த இறைவனை நாம் உணரலாம். அப்பொழுது அந்த இறைவனுடன் தொடர்பு கொள்ளும் சக்தி நமக்கு ஏற்படுகிறது. நாம் இறைவனைத் தொடர்பு கொள்ளவே பிறந்திருக்கிறோம்  என்பது தான் இந்த பாரத மண்ணில் பிறந்த ஞானிகள் கண்டு பிடித்து கூறிய உண்மை ஆகும்.



Post a Comment

 
Top