நான் சொல்லுவது தான் சரி என்கின்ற மனப்பான்மை நம் எல்லோருக்கும் இருக்கின்றது. இன்று உலகில் ஏற்படும் பலப் பிரச்சினைகளுக்கு இந்த மனப்பான்மை தான் காரணம் என்றால் அது மிகையாகாது. நாம் சொல்லுவது தவறு என்று பேசிய பின் தெரிந்தாலும் நாம் அதை ஒப்புக்கொள்வதே இல்லை. மீண்டும் மீண்டும் நமது தவறான கூற்றை சரி என்று மெய்ப்பிக்க  நாம் முயற்சிப்போம். நான் சொல்லுவது தான் சரி என்கின்ற மனப்பான்மை மிகவும் ஆபத்தானது. அதனால் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்.



நாம் யாரிடம் பேசினாலும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் தான் பேசுவோம். நாம் சொல்லுவது எல்லாமே எப்பொழுதுமே சரியாக இருக்கும் என்கின்ற ஆணவத்தோடு தான் நாம் பேசுகிறோம். நாம் சொல்லியது தவறு என்று தெரிந்தாலும் நாம் அதை எளிதில் ஒப்புக்கொள்வதே இல்லை என்பதே உண்மை. தவறு என்று தெரிந்தாலும் நாம் ஒப்புக்கொள்ளாததற்கு காரணம் நம் அகந்தையே. 

அகந்தை என்பது அங்கெங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளது எனலாம். ஆண்  பெண், என்ற வித்தியாசம் இல்லாமல், மத, ஜாதி, இன, நிற பேதங்கள் இல்லாமல்  எல்லோருக்கும் இந்த அகந்தை இருக்கிறது. அகந்தை இருக்கும் வரை நாம் உண்மையான முன்னேற்றத்தைக் காண இயலாது என்பது நிஜம்.

தவறு என்று தெரிந்தால் நாம் உடனே அதை ஒப்புக்கொள்ளவேண்டும். எல்லாம் தெரிந்தவர் இந்த உலகில் யாரும் இல்லை என்பதே உணமை. தவறு செய்தால் மன்னிப்பும் கோரலாம். அது ஒன்றும் நம் கௌரவத்திற்கு இழுக்காகாது. மேலும் நாம் நம் தவறை திருத்திக்கொண்டு வளர அது பெரிதும் உதவும்.

எல்லாம் தெரிந்தவர் போல் பேசுவதைத்  தவிர்ப்போம். தவறென்று தெரிந்தால் திருத்திக் கொள்வோம். தேவைப்பட்டால் மன்னிப்பும் கோருவோம். நாம் சொல்லுவது எப்பொழுதுமே சரியாக இருக்க முடியாது என்கின்ற உண்மையை உணருவோம். அகங்தை இல்லாமல்  வாழக் கற்றுக் கொள்வோம். 

நான் சொல்லுவது சரி தானே?

வாழ்க வளமுடன்! 

திருமண உறவைக் கொன்று விடும் அகங்காரம் 

எதிர்பாராரதை எதிர்பாருங்கள் 

Post a Comment

 
Top