நாம் மற்றவர்களுக்காக வாழ்வதை சிறு வயதிலேயே கற்றுக் கொள்கிறோம். நம் பெற்றோர் நம்மை அப்படித்தான் வளர்க்கிறார்கள். 'நீ படிக்காவிட்டால் நம் சொந்தக்காரர்கள் உன்னை மதிக்கமாட்டார்கள். இந்த சமூகமும் உன்னை மதிக்காது' என்று சொல்லியே  வளர்க்கிறார்கள்.


நாம் நாமாக வாழ முடிகிறதா இந்த உலகில்? இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்கிறார்கள். எத்தனைப் பேரால்  தமக்குப்  பிடித்த பாடத்தை எடுத்து படிக்க முடிகிறது? தமக்குப் பிடிக்காத எத்தனை விஷயங்களை இன்று  குழந்தைகள் தம் பெற்றோர்களுக்காக செய்கின்றனர்? மற்றவர்கள் தம் குழந்தைகளைப்  பாராட்ட வேண்டும் என்பதற்காக குழந்தைகள் மீது இன்று பெற்றோர்கள் எத்தனையோ விஷயங்களைத்  திணிக்கிறார்கள். தன குழந்தை, படிப்பிலும், விளையாட்டிலும், இசையிலும் இன்னும் எல்லா விஷயங்களிலும் முதலாக வர வேண்டும் என்று அவர்களை சித்திரவதை செய்கின்றனர். 

கல்யாணமாவது மனதுக்கு பிடித்தவருடன் செய்ய முடிகிறதா? ஜாதி, மதம், சமூகம் என்று எத்தனையோ விஷயங்களுக்காகப்  பயந்து பிடிக்காத மணவாழ்வில் எத்தனை பேர் இன்று உழன்றுக் கொண்டிருக்கிறார்கள்?

சமூகம் முக்கியம் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால் அதற்காக நம் மொத்த விருப்பு வெறுப்புகளையும் சமூகத்திற்காக தியாகம் செய்வது என்பது முட்டாள்த்தனமின்றி  வேறு என்ன?

நாம் நமக்கு மிகவும்  பிடித்த விஷயங்களை மற்றவர்கள் தப்பாக நினைப்பார்களோ, அல்லது , கேவலமாக பேசுவார்களோ என்று நினைத்து, பயந்து, செய்யாமல் இருப்பது தவறு. உங்களுக்குப்  பாடப் பிடிக்கும் என்றால், ஏன் பாடகராகக் கூடாது? எதற்காக மென் பொருள் பொறியாளராக வேண்டும்?

பிடிக்காத ஒருவருடன் ஏன் வாழ வேணடும்? பிடிக்காத மனைவி, பிடிக்காத கணவன், பிடிக்காத வேலை இவைகளை ஏன் நாம் தூக்கி எறியக்கூடாது? 

வாழ்க்கை மிகவும் குறுகியது. சில வருடங்கள் இந்த உலகில் வாழ்கிறோம். அதை ஏன் நம் மனதிற்குப பிடித்த மாதிரி வாழக்கூடாது?

சமூகத்தை மதிப்போம். ஆனால் அதே சமயம் மற்றவர்களுக்காக வாழ்வதை விட்டொழிப்போம். வாழ்க வளமுடன்!

                         விதி வலியதுதானா?

                             வாஸ்து சாஸ்திரம் உண்மையா?

Post a Comment

 
Top