நாம் வாழ்க்கையில் எத்தனையோ பேரிடம் அந்தக் கண நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு சண்டை போட்டு விடுகிறோம். பின்  நம் தவறை உணர்ந்து வருந்துகிறோம். அவர்களிடம் மன்னிப்பு கேட்க மனம் நினைத்தாலும் பாழாய் போன ஈகோ நம்மை தடுப்பது நிஜம். அந்த குற்ற உணர்ச்சியோடே நாம் வாழ்கிறோம். அது நம் மன நலத்திற்கும், நம் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும். நாம் பலரிடம் மனதார மன்னிப்பு கேட்டு விட்டால் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கை நம் வசப் படும். வாழ்க்கை வசந்தமாகும். நீங்கள் மனதார மன்னிப்பு கேட்பீர்களா? மேலே படியுங்கள்.....


அதே போல் தான் நாம் பலர்  நமக்கு செய்த தீங்குகளை நினைத்து அல்லது நாம் எதிர்பார்த்த அளவுக்கு அவர்கள் தங்களுக்கு உதவ வில்லை என்று அவர்கள் மேல் குறை பட்டுக் கொண்டும் கோபப் பட்டுக் கொண்டும் அவர்கள் பால் வெறுப்பையும் கோபத்தையும் சுமந்து கொண்டு நிம்மதியற்று வாழ்வோம். ஒரு முள் நம் காலில் குத்தி விட்டால் அது உறுத்திக் கொண்டே இருக்கும் அல்லவா? அது போல் தான் இதுவும் நம் மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். நாம் அவர்களை மனதார மன்னிக்கும் போது நம் மனம் லேசாகிறது. நிம்மதியடைகிறது. மனம் நன்றாக இருக்கும் போது நம்மால் பல விஷயங்களை சாதிக்க முடியும். அது நம் வாழ்வில் உயர உதவும் என்பது சத்தியம்.

நாம் பலரை மன்னிக்க வேண்டியிருக்கும். முதலில் நாம் நம்மையே மன்னிக்க கற்றுக் கொள்ள  வேண்டும். நாம் நம்மை மன்னிக்கா விட்டால் நம் மனது தற்காலிக இன்பத்தை அடைய முற்படும். மது அருந்தலாமா, புகை பிடிக்கலாமா, காம களியாட்டங்களில் ஈடுபடலாமா, கடமைகளில் தவறலாமா  என்று மனம் அலை பாயும். நாம் நம்மை மன்னிக்காததால் நாம் நமக்கு கொடுக்கும்  தண்டனையே அந்த தீய மற்றும் தவறான  செயல்கள் .

உங்கள் பெற்றோரை மன்னியுங்கள். நண்பர்களை மன்னியுங்கள். சொந்தக்காரர்களை மன்னியுங்கள். கணவனை மன்னியுங்கள். மனைவியை மன்னியுங்கள். குழந்தைகளை மன்னியுங்கள். உங்கள் முதலாளியை மன்னியுங்கள். சக தொழிலாளியை மன்னியுங்கள். எல்லோரையும் மன்னித்துப்  பழகுங்கள். வாழ்க்கை எளிதாகிப் போகும்.

மன்னிப்பு கேளுங்கள். மன்னியுங்கள். மனம் லேசாகிப் போகும். மனம் ஆரோக்கியமாக இருக்கும் போது சாதனைகள் புரிவதும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதும் எளிதாகிப் போகும். உங்கள் வாழ்க்கை உங்களுக்கு வசப் படும். வசந்தமாகும்.

வாழ்க வளமுடன்!




Post a Comment

 
Top