இன்று உ லகமே போட்டிமயமாகி விட்டது. எங்கும் போட்டி. எதிலும் போட்டி. மக்கள் பரபரப்புடன் வாழ்கின்றார்கள். எதிலும் அவசரம், எதிலும் வேகம். இப்பொழுது எல்லோரும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதில்லை. அதனால்  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க  வேண்டும் என்று அதீதமாய் ஆசைப் படுகின்றனர்.



தாயின் மடியில் சந்தோஷமாக இருக்க வேண்டிய வயதில் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். அத்தோடு விடுகிறார்களா? தான் என்னவெல்லாம் ஆக வேண்டும் என்று நினைத்து ஆகா முடியாமல் போனதோ அவற்றை எல்லாம் பிள்ளைகள் மேல் திணிக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிப்பில் முதல் மதிப்பெண்  வாங்க வேண்டும், பின்  ஐ. ஏ.எஸ் தேர்ச்சி பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதே சமயம் கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கி நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று   பேராசைப் படுகின்றனர். நடுவில் கொஞ்சம் பாட்டு, டான்ஸ். கீ  போர்ட்   முதலியவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டுமாம்.

இது சரியான அணுகுமுறைதானா? இப்படி எல்லா விஷயங்களையும் ஒரு குழந்தை வாழ்க்கையில் திணிப்பது சரியா? மேல் நாடுகளில் சிறு வயதிலேயே ஒரு குழந்தையின் தனித்திறமையை கண்டு பிடித்து அது சம்பத்தப்பட்ட படிப்பையே கற்றுக் கொடுக்கின்றனர். ஒரு குழந்தை நன்றாக பாடுகிறது என்றால் அந்த குழந்தையை பாட்டு சம்பந்தப்பட்ட படிப்பில் சேர்ப்பார்கள். அதிலேயே அந்த குழந்தையை நிபுணராக்கின்றனர்.

சச்சின் கிரிக்கெட்டில் மட்டும் தான் புலி. வேறு எந்த விஷயங்களும் அவருக்குத்  தெரியாது. அதனால் தான் அவரால் அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் சாதிக்க முடிந்தது. உங்கள் குழந்தையின் உள்ளார்ந்த பிறவித் திறமைகளைக்  கண்டு பிடியுங்கள். அந்த துறையில் உங்கள் குழந்தையை நிபுணராக்குங்கள்.

உங்களுக்கு டென்னிஸ் பிடிக்கும் என்பதற்காக உங்கள் குழந்தையை டென்னிஸ் வீரராக ஆக்க முயற்சிக்காதீர்கள். பல விஷயங்களைக் கற்றுகொள்ளுவது நல்லது என்று ஒரு சாரார் சொல்லுவார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. எதற்கு தேவை இல்லாத விஷயங்களை, வாழ்க்கையில் என்றுமே பெரிதாக பயன்படப் போகாத விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்? எதற்கு நம் நேரத்தை வீணடிக்க வேண்டும்? வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. 

உங்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு துறையில் நிபுணராக்குங்கள். ஒவ்வொரு இந்தியனும் ஒரு துறையில் தனித் திறமைப் பெற்றால் இந்தியா  விரைவில் வல்லரசாகி விடும்.

நடிகர் கமல ஹாசன் அவர்களின் தாயார் அவரிடம் ஒரு முறை இப்படி சொன்னாராம், "கமல், நீ கழிப்பறை துப்பரவு தொழிலாளி ஆனாலும் பரவாயில்லை. ஆனால் நீ அதில் நாட்டிலேயே சிறந்தவனாக வர வேண்டும்'.

ஒரே விஷயத்தில்  தனித் திறமைப் பெறுங்கள். நிபுணத்துவம் பெறுங்கள். நீங்களும் முன்னேறுவீர்கள். நாடும் முன்னேறும். வாழ்க வளமுடன்!

           எதிர்பாராததை எதிர் பாருங்கள் 

                                 ஆசைப் படுவது தவறா?



Post a Comment

 
Top