நாம் ஒரு சிலரை நல்லவர் என்றும் ஒரு சிலரை கெட்டவர் என்றும் முத்திரைக்  குத்துகிறோம். ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று எப்படி தீர்மானிப்பது? என்ன அளவுகோல் நாம் வைத்திருக்கிறோம்? யார் இதற்கு இலக்கணம் வகுத்தது?


நாம் பொதுவாக கெட்ட பழக்கங்கள் உடையவரைக் கெட்டவர் என்கிறோம் என்று தோன்றுகிறது. மொடாக்  குடிகாரனை, சிகரெட் பிடிப்பவரை, காமுகனைக் கெட்டவன் என்று தரம் பிரிக்கிறோம்.

கெட்ட பழக்கங்கள் உடைய ஒருவன் கெட்டவனாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? அவனை ஒழுக்கம் இல்லாதவன் என்று கூறலாம். ஆனால் கெட்டவன் என்று சொல்லுவது சரியாகுமா?கவிச் சக்ரவர்த்தி கண்ணதாசன் அவர்கள் கெட்ட பழக்கங்கள் உடையவர் தான். அவர் அதை தைரியமாக ஒப்புக் கொள்ளவும் செய்தார். வெளி வேஷம் போடத் தெரியாத உத்தம மனிதர் அவர். கடவுள் அனுக்கிரகம் பெற்ற மஹாக் கவி அவர். அவரைக் கெட்டவர் என்று சொல்ல முடியுமா? 

ஒருவன் எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் மகாக் கருமி. யாரும் நன்றாக இருப்பது கண்டு பொறுக்க இயலாதவன். சமயம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர் வாழ்வைக்  கெடுப்பவன். அவனால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை. அவனால் எல்லோருக்கும் தொல்லை தான் மிஞ்சும். அவனை நல்லவன் என்று எப்படி கூற இயலும்?

என்னைப் பொறுத்த வரை கெட்ட பழக்க வழக்கங்கள் உடையவர் எல்லாம் கெட்டவர்கள் அல்லர். நல்ல பழக்க வழக்கங்கள் உடையவர் எல்லாம் நல்லவரும் அல்லர். யார் எல்லா உயிரினங்களிடத்தும் அன்பாக இருக்கின்றாரோ, யார் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றாரோ, யார் வாழ்க்கையையும் கெடுக்காதவர் யாரோ அவரே நல்லவர். 

உண்மையான ஆன்மிகவாதிகளும் நல்லவரே. 

சிலர் பணம் வைத்திருப்பவரெல்லாம் நல்லவர் என்று நினைக்கிறனர். அவர் எந்த கெட்ட வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும் அவர் நல்லவராக அவர்கள் கண்ணுக்குத்  தெரிவார். ஏழைகள் எல்லோரையும்  கெட்டவராக இந்த உலகில் சிலர் சித்தரிக்கின்றனர்.

யார் கெட்டவர்? நீங்களேக்  கூறுங்களேன்.


Post a Comment

 
Top