கோபம் என்பது ஒரு எதிர்மறையான உணர்ச்சியாகும். கோபம் பெரிய இழப்புகளையும், நஷ்டங்களையும் தரவல்லது. ஏன் கோபம் உண்டாகிறது? ஏன் ஒரு சிலரால் கோபத்தைக் கட்டுப்படுத்தமுடிவதில்லை? கோபப்படுபவர்கள் எல்லாம் கோழைகளா? மேலே படியுங்கள் ..........


நம் விருப்பப்படி, எதிர்பார்த்தப்படி விஷயங்கள் நடக்காதபோது கோபம் வருகிறது. நமக்கு கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்காதபோது அல்லது மரியாதை கிடைக்காதோ என்று சந்தேகம் எழும்போது கோபம் வருகிறது. எத்தனையோ விஷயங்கள் நம்மைக் கோபப்படுத்துகின்றன.

வேற்று மதத்தினர் நம் மதத்தைப் பற்றிக்   கேவலமாக பேசும் போது, நம் பிள்ளைகள் நமக்கு பிடிக்காதவர்களை காதலிக்கும்போது, மேலதிகாரி நம்மை திட்டும் போது, நம் வாழ்க்கைத்துணை நம் பேச்சைக் கேட்காதபோது, சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது,  பிள்ளைகள் நம் பேச்சைக் கேட்காதபோது, நாம் நம்பியவர்கள் நமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும்போது, நம்மை மற்றவர்கள் மதிக்காதபோது, மற்றவர்கள் நம்மை அவமதிக்கும்போது, நம் ஆசைகள் நிறைவேறாதபோது என்று பல விஷயங்கள் நம்மை ஆத்திரப்பட வைக்கின்றன.

கோபப்படும்போது நாம் கட்டுப்பாடின்றி வார்த்தைகளைக் கொட்டிவிடுவோம். அதனால் நாம் பல நஷ்டங்களையும், இழப்புகளையும் அனுபவிக்கவேண்டி வரலாம். கோபப்படும்போது நம் மனம் சலனப்பட்டு இருக்கும். அப்போது நாம் எடுக்கும் முடிவுகளும், பேசும் வார்த்தைகளும், செய்யும் செயல்களும் நமக்கு பெரிய இழப்புகளை ஏற்படுத்தக் கூடும். ஆகையால் ஆத்திரப்படும்போது எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கக் கூடாது.  

மன வலிமை இல்லாதவர்கள் தான் அடிக்கடி கோபப்படுவார்கள். உண்மையான தைரியசாலிகள் எளிதில் கோபப்படமாட்டர்கள். தினமும் தியானம் செய்தால் மனம் வலிமைப்படும். கோபம் குறையும்.

ஆனால் சில விஷயங்களுக்கு கோபப்படத்தான் வேண்டும். அந்த கோபம் ஒரு வைராக்கியமாக மாற வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் காந்தி ஓடும் ரெயிலில் முதல் வகுப்பிலிருந்து வெளியே தள்ளப்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட கோபம்  வைராக்கியமாக மாறியதால் பெரிய தலைவரானார். பிற்காலத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு அவர் உயர்ந்தார்.

கோபப்படவேண்டிய விஷயங்களுக்கு கோபப்படவேண்டும். ஆனால் சின்ன விஷயங்களுக்கு, தேவையில்லாத விஷயங்களுக்காகக்  கோபப்படுவது தவறு.

கோபத்தைத்  தவிருங்கள். அது உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. 

தினமும் தியானம் பண்ணுங்கள். உங்கள் மனம் அமைதியாக, சலனமின்றி இருக்கும். எளிதில் கோபம் ஏற்படாது. வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top